வெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்டிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகமே குலுங்கும் வகையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்புவிழா கோலாகலமாக நடந்துமுடிந்துள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக கோரிக்கை வைத்தார்.


இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கு, இந்தப் பிறவி மட்டுமல்ல, இன்னும் ஏழேழு பிறவி எடுத்தாலும் தீர்க்க முடியாத நன்றிக் கடன் நாங்கள் பட்டிருக்கின்றோம். என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டாடும் அளவுக்கு தமிழகம் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்.

அந்த நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான், நமது இயக்கத்தின் நிறுவனர், தலைவர், புரட்சித் தலைவர், எம்ஜிஆர் அவர்களின் நினைவிடத்தின் அருகே, எழிற் கோலமாய் அமைக்கப்பட்டு 

இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடம் ஆகும் என்பதனை நான் இங்கு பணிவோடு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அரசு சார்பிலான நினைவில்லம் என்று குறிப்பிடப்பட்டாலும், கழகத் தொண்டர்களுக்கும், தாய்மார்களுக்கும், தமிழக மக்களுக்கும், இது அம்மா அவர்களின் நினைவாலயமே இது என்பது இன்று வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது. 

இது வெறும் நினைவிடம் அல்ல... உண்மை ஒளிவீசும் இடம்... நேர்மை ஒளிவீசும் ஒடம்... வாய்மை ஒளிவீசும் இடம்... சத்தியமும் ஒளி வீசும் இடம்... சாதனைகள் ஒளி வீசும் இடம்... தமிழ்நாட்டில் தீயசக்திகள் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக நாளும் நாளும் உழைக்க வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களுக்கு பாடம் எடுக்கும் இடம். ஓய்வில்லாமல் உழைத்து உழைத்து தமிழக மக்களை உயர்த்திவிட்ட மனித தெய்வம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது.  

மக்களால் நான்... மக்களுக்காகவே நான்... என்ற வீரமுழக்கம் இங்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது... "அம்மா" என்ற மூன்றெழுத்து, நம்முடைய உயிர் எழுத்து.... எதிரிகளுக்கோ அது ஆயுத எழுத்து... இந்த நினைவிடத்திற்கு வரும் பொழுதெல்லாம் வீரம் பிறக்கும்... நெஞ்சில் ஈரம் சுரக்கும்...

அம்மா, நீங்கள் தமிழக மக்கள் மீது செலுத்திய அன்பு இன்னும் மறையவில்லை... எக்காலமும் மறையவே மறையாது. நீங்கள் தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்... தமிழ் இனத்திற்குக் கிடைத்த தங்கப் புதையல்... ஏழை எளியவர்க்குக் கிடைத்த அட்சயப் பாத்திரம்... 

அதனால் தான் அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும், என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும், இங்கு குடியிருக்கும் உங்களின் ஆன்மா எங்களுக்கு துணையாக இருக்கும் அம்மா... இந்த நினைவிடம் விசுவாசத் தொண்டர்கள் உங்களுக்காக எழுப்பியிருக்கும் ஆலயம்... எத்தனையோ தெய்வங்களை வணங்கிக் கொண்டிருக்கும் தமிழக மக்கள், மதங்களை கடந்து மனதால் ஒன்றுபடுவதற்காக நாங்கள் கட்டிய ஆலயம்...

இங்கே உங்களின் விசுவாசத் தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டிருக்கிறோம். அருகில் இருக்கும் வங்கக் கடலை விட பெரிய மக்கள் கடல், இங்கு கடலாக கூடியிருக்கிறோம்... வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற வழிகாட்டுங்கள்... தாயே, வெற்றிபெற வழிகாட்டுங்கள்...

வெற்றி பாதையில் பயணம் செய்ய ஒளிகாட்டுங்கள் தாயே... ஒளிகாட்டுங்கள்... தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழகர்களின் உயர்வுக்கு உழைப்பதற்காக எங்களுக்கு ஆசி கூறுங்கள் தாயே... எங்களுக்கு ஆசி கூறுங்கள்... தேர்தல் களத்திலே எதிரிகளை வென்று வெற்றிக் கனியை இங்கு வந்து உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே... எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே...

உங்கள் பிள்ளைகளை இந்த உலகமே பாராட்ட, வெற்றிமேல் வெற்றி பெற்று சாதனை மேல் சாதனை படைக்க உங்களோடு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுங்கள் தாயே... என்ற நம்பிக்கையைக் எங்களுக்கு கொடுங்கள் தாயே... என்று வணங்கிக் கேட்கிறோம் தாயே... என்று பேசியிருக்கிறார் துணை முதல்வர்.