பாரம்பரிய மருத்துவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு..!

கொரோனா நெருக்கடி காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவ அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோருக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து ஆயுஷ் விருதுகளை வழங்கி கவுரவித்தனர். மொத்தம் 29 மருத்துவர்களுக்கு ஆயுஷ் விருதுகளும், 5 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சிறப்புரையில், ‘’பழங்காலத்தில் வாழ்ந்த யோக அறிஞர்கள் இந்த உலகிற்கு பரிசாக பல மருத்துவ முறைகளை அளித்து சென்றுள்ளனர். தனித்திருந்தும், விழித்திருந்தும், விலகி இருந்தும் ஆற்றல் பெற்ற சித்தர்களின் மன அமைதி, ஞானம், பேரின்பம் ஆகியவற்றை அந்த தமிழ் ஞானிகள் தாங்கள் கற்ற அனுபவங்கள், பெற்ற இன்பங்களை, "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பதற்கு ஏற்ப இந்த மானிட சமுதாயம் பயன்பெற மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தனர்.

கலை நுணுக்கங்கள் தமிழ் சமுகத்தின் அறிய பொக்கிஷங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. தலைசிறந்த கலையாக விளங்கும் மருத்துவ கலை, உடலின் பிணியகற்றி உலகிற்கே வழிகாட்டி தொன்மை வாய்ந்தாக அமைகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் திருவள்ளுவர் தனி அதிகாரமே படைத்துள்ளார். அலோபதி மருத்துவர்களுடன் இணைந்து நமது பாரம்பரிய மருத்துவர்கள் இடைவிடாது பணியாற்றி, கொரோனாவை கட்டுக்கள் கொண்டு வர பாரம்பரிய மருத்துவம் துணையாக இருந்ததை இந்தியாவே பாராட்டுகிறது. உலக தமிழ் வர்த்தக சங்கம், உலக தமிழ் வம்வாளி அமைப்பு இணைந்து கொரோனா காலத்தில் பணியாற்றிய பாரம்பரிய மருத்துவர்களுக்கு விருது கொடுப்பது பாராட்டுக்குரியது. அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். 

ஆயுஷ் விருது , மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், தேசிய மருத்துவ கவுன்சிலால் தேர்வு செய்யப்பட்டு அளிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய மருத்துவர்களை பாராட்டி வழங்கப்படும் இந்த விருது மற்ற மருத்துவர்களுக்கு மேலும் சிறப்பாக பணியாற்ற உத்வேகம் அளிக்கும். அதிலும் அலோபதி மருத்துவரான தமிழிசை கரங்களால் இந்த விருதுகள் வழங்கப்பட்டது மேலும் தனிச்சிறப்பு. நம்மில் ஒருவர் கவர்னராக இருப்பது தமிழகத்திற்கே பெருமை.’’ என்று பாராட்டினார்.