ரஹானேவிற்கு பதிலடி கொடுத்து ராஜஸ்தான் அணியை அலற வைத்த ரிஷாப் பாண்ட்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ரஹானே உடன் இணைந்தார். ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய ரஹானே டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரஹானே சதம் விளாசினார். இவர் 63 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. டெல்லி அணியின் ரபாடா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ப்ரித்வி ஷா மற்றும் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.பிரித்வி ஷா 42 ரன்களும், தவான் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய இளம் புயல் ரிஷாப் பாண்ட் 36 பந்துகளில் 78 ரன்களை விளாசி டெல்லி அணிக்கு வெற்றி தேடி தந்தார்.இதனால் டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய ரிஷாப் பாண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.