எங்கள சேர்த்துக்கோங்க! கெஞ்சி கதறிய பேபிம்மா பேரவை! பங்கம் பண்ணி அனுப்பிய அதிமுக!

சென்னை: தீபா பேரவையினரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று, அதிமுக.,வினர் கட்சித் தலைமைக்கு, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா தனியாக கட்சி தொடங்குவதாக, அறிவித்தார். இதன்படி, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை தொடங்கிய அவர், சில நாட்கள் முன்பாக, அரசியலை விட்டு விலகுகிறேன், என அறிவித்தார். இதையடுத்து, தீபா பேரவையை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் மீண்டும் தாய்க்கழகமான அதிமுக.,விலேயே இணைய தொடங்கியுள்ளனர்.

சில இடங்களில் இதற்கான இணைப்பு விழா நடைபெற்றாலும், தமிழகம் முழுக்க பல இடங்களில் தீபா பேரவையினரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம் எனக் கூறி, அதிமுக.,வினரே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

இதன் ஒருபகுதியாக, திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற தீபா பேரவையினர் அதிமுக.,வில் இணையும் விழா, கட்சியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.  தீபா பேரவையில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஆர்.சி.கோபி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக.,வில் இணையும் விழா, பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்தனர். ஆனால், உள்ளூர் அதிமுக.,வினர் மேற்கொண்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக, வேறு வழியின்றி நிகழ்ச்சியை பாதியிலேயே கைவிட நேர்ந்தது. இதனால், ஆத்திரமடைந்த தீபா பேரவையினர் தங்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தி, அதிமுக.,வை எதிர்த்து சாலை மறியல் செய்தனர். இதனால், ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து, சமரசம் செய்து வைத்தனர்.