தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்கலைன்னா அம்புட்டுத்தான்… மிரட்டும் பா.ம.க.

சாதாரணமாக தயாநிதி மாறன் பேசிய ஒரு விவகாரம் ஒரு மாபெரும் பிரச்னைக்கு வழிவகுத்துவிட்டது.


சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பா.ம.க.வுடன் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தயாநிதி, “அத பத்தி எனக்கு தெரியாதுங்க, அவங்க யார்கிட்ட பேரம் பேசராங்கன்னு தெரியலை யார் அதிகம் காசு தராங்களோ அவங்களோட போவாங்க ஏன்னா போன முறை 400 கோடி வாங்கினதாக சொல்றாங்க. இந்த முறை 1000 கோடி கேட்கறதா சொல்லறாங்க” என்று தெரிவித்திருந்தார். திமுக அதுக்கு தயாரா இருக்குதா என்று கேட்க, எங்க கிட்ட அவ்ளோ காசு இல்லைங்க, கொள்கை மட்டும் தான் இருக்கு என்று பதில் சொன்னார்.

இந்த விவகாரம்தான் பெரிய வில்லங்கமானது. அவர் பூசாரிப்பட்டி நோக்கி சென்ற நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க.வினர், கருப்புக்கொடி காட்டியதுடன் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, காவல் துறை, திமுகவினரின் பாதுகாப்புடன் ரயில் நிலையத்துக்குச் சென்ற தயாநிதி மாறன் அங்கிருந்து சென்னை சென்றார்.

இந்த நிலையில் ராமதாஸ் குறித்து அவதூறாக பேசியதற்கு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தயாநிதி மாறனுக்கு ஜி.கே. மணி சார்பில் வழக்கறிஞர் பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், “பாமக பற்றியும் அதன் நிறுவனர் ராமதாஸ் குறித்தும் அவதூறு பரப்பும் நோக்குடன் பொய்யான செய்திகளை உள்நோக்கத்துடன் வெளியிட்ட திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அதற்காக 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அவ்வாறு கேட்காவிட்டால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று பாமக தலைவர் ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு தயாநிதி மாறன் என்ன சொல்லப்போகிறார் என்று பார்க்கலாம்.