ஓங்கி அடித்த வார்னர்! சுருண்டு விழுந்த பவுலர்! வலைப் பயிற்சியில் விபரீதம்!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் பயிற்சியின்போது வலை பந்துவீச்சாளரின் தலையில் பந்தை வேகமாக அடித்திருப்பது ஓவல் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. நாளைய ஆட்டத்தில் இந்திய அணி யும் ஆஸ்திரேலிய அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை முதல் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நீண்ட நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

பயிற்சியின்போது டேவிட் வார்னருக்கு ஓவல் மைதானத்தில் உள்ள ஒரு வலைப்பயிற்சி பந்து வீச்சாளர் பந்து வீசி கொண்டிருந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த டேவிட் வார்னர் ஒரு பந்தை விரட்டியடித்தார். அந்தப் பந்து எதிர்பாராத விதமாக பந்துவீச்சாளரின் தலையை தாக்கியது. உடனே பந்துவீச்சாளர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அந்த பந்துவீச்சாளரின் பெயர் ஜெய்கிஷன் பிளாஹா என்பதாகும்.

டேவிட் வார்னர் பதறிப்போய் அந்த பந்து வீச்சாளரை தேற்றினார். பின்னர் ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் விரைந்து வந்து அப்பந்துவீச்சாளருக்கு தேவையான முதலுவியை செய்தார்.

பின்னர், அந்த பந்துவீச்சாளரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி மருத்துவமனைக்கு சென்றனர். பயிற்சிக்குப் பின்னர் அணியின் தலைவரான ஆரோன் பிஞ்ச் செய்தியாளர் சந்திப்பிற்கு வந்தார்.அப்போது அவரிடம் இந்த நிகழ்வு குறித்து இறுதியாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "டேவிட் வார்னர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். எதிர்பாராதவிதமாக அவர் அடித்த பந்து பந்து வீச்சாளரின் தலையை தாக்கியது. சிறிது நேரத்திற்கு பயிற்சி தடைபட்டதாகவும், பின்னர் சீரானது என்றும் பதிலளித்து வேட்டியை நிறைவு செய்தார்.