துரத்திய ஏழ்மை! பட்டாசு தயாரித்துக் கொண்டே படித்தேன்..! குரூப் ஒன் தேர்வில் வென்ற சிவகாசி மகாலட்சுமி!

பட்டாசு தொழிலாளியின் மகள் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றிருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சிவகாசியில் மகாலட்சுமி என்ற பட்டாசு தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் மகாலட்சுமி. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் மகாலட்சுமிக்கு அரசு வேலையில் பணிபுரிய வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் ஏழ்மையின் காரணமாக அவரால் இதனை எளிதில் சாதிக்க இயலவில்லை. தன்னுடைய தந்தையுடன் இணைந்து கொண்டு பட்டாசு தயாரிப்பு தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 

நாளொன்றுக்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே அவருக்கு படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மற்ற நேரங்களில் பட்டாசுகளின் மூலப்பொருள்களை தயாரிப்பதும், வீட்டு வேலைகளும் என்று சரியாக இருந்துள்ளது. இதுவரை 4 முறை அவர் குரூப் தேர்வுகளை எழுதியுள்ளார். இருப்பினும் அவரால் தேர்ச்சிபெற இயலவில்லை. அவருடைய பெற்றோர் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை அடமானம் வைத்து சென்னையில் பயிற்சி படிப்பில் மகாலட்சுமியை சேர்த்தனர். 

இந்த முறை மிகுந்த சிரமத்திற்கு பிறகு மகாலட்சுமி குரூப் தேர்வில் 362-வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். மாநில அளவில் 4-ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டறிந்த போது, "குடும்ப வறுமையின் காரணமாக பட்டாசு தொழிலில் களம் இறங்கினேன். அதில் சம்பாதித்த பணத்தை வைத்து புத்தகங்களை வாங்கி படித்தேன். மேலும், விடாமுயற்சி செய்து தற்போது தேர்ச்சி பெற்றுள்ளேன்.

இதற்கு என்னுடைய பெற்றோரே முழுமுதற் காரணம். ஏழை மக்களுக்கு உதவி செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படுவேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த செய்தியானது சாதித்து காட்ட வேண்டுமென்ற துடிக்கும் இளம்பெண்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.