87 வயது மாமியாரை கைகளால் தூக்கி சுமந்த மருமகள்! நெகிழ வைக்கும் காரணம்!

87 வயது மாமியாரை மருமகள் தூக்கிவந்து உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வைத்த சம்பவமானது பூந்தமல்லியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக நடைபெற்று முடிந்தது. காலை முதலே மக்கள் வாக்களிப்பதற்கு ஆர்வமாக திரண்டிருந்தனர். பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்டது சென்னீர்குப்பம் ஊராட்சி. இங்குள்ள ஏரிக்கரை தெருவில் 87 வயது முதியவரான பாப்பம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மருமகளின் பெயர் பாண்டியம்மாள்.

உள்ளாட்சி தேர்தலில் நிச்சயமாக வாக்களித்து விட வேண்டும் என்று தன்னுடைய ஆசையை பாப்பம்மாள் தன் மருமகளான பாண்டியம்மாளிடம் கூறியுள்ளார். பாப்பம்மாளுக்கு கண் சரிவர தெரியாது. மேலும் தன்னால் தனியாக நடந்து செல்ல இயலாது. இத்தகைய காரணங்களினால் பாண்டியம்மாள் சற்று யோசித்து வந்தார்.

ஆனால் பாப்பம்மாளோ நிச்சயமாக வாக்களித்தே தீருவேன் என்று அடம் பிடித்துள்ளார். உடனே பாண்டியம்மாள் தன்னுடைய மாமியாரை ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். வாக்கு மையத்திற்கு சென்ற பின்னர் அங்கு வீல்சேர் இல்லாத காரணத்தினால், சற்றும் யோசிக்காமல் பாண்டியம்மாள் பாப்பம்மாளை தூக்கி ஓட்டு செலுத்தும் மையத்திற்குள் அழைத்து சென்றுள்ளார்.

இதனை பார்த்த வாக்காளர் மையத்தில் இருந்தோர் நெகிழ்ந்து போயினர். இந்த சம்பவமானது பூந்தமல்லி ஒன்றியத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.