அத்திவரதர் நின்ற கோலம் அமைப்பதில் ஏன் தாமதம் தெரியுமா? மீண்டும் தண்ணீருக்குள் போவதிலும் அத்திவரதருக்கு எதிர்ப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கோயில் குளத்தில் வைக்கப்பட்டிக்கும் அத்தி வரத பெருமாள் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு தற்போது சயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.


ஜூலை 25ம் தேதி முதல் அத்தி வரதர் நின்ற நிலை தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த அத்தி வரதர் வைபவம் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டு தற்போது வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகின்றது. அதில் முதல் 24 நாட்கள் கிடந்த நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அத்தி வரதர் நின்ற நிலையில் தரிசனம் தருவது கால தாமதம் ஆகும். சிலை உறுதிக்கான அமைப்பை ஏற்படுத்திய பின் நின்ற கோலத்தில் காட்சி தருவார் என கூறப்பட்டுள்ளது.

சிலை சற்று பலவீனமாக இருப்பதால், சிலையை நிற்கும் நிலைக்கு மாற்றி ஆகஸ்ட் 1 - 17 வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி தருவரர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தினமும் குறைந்தது 50,000 பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், சிலை நின்ற நிலைக்கு மாற்றப்படும் போது, ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய வர வாய்ப்புள்ளதால், பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தி வரதரை மீண்டும் குளத்தில் புதைக்கக் கூடாது என முதல்வரிடம் கடிதம் அளிக்க உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

பெருமாளை காற்றுபுகாத இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. முன்பு சிலை திருட்டு பயம் இருந்த காலத்தில் சிலை குளத்தில் புதைத்து வைத்திருந்தனர். ஆனால் இப்போது அப்படி கிடையாது. அதனால் அத்தி வரதர் சுவாமியை திருக்கோயிலிலேயே வைத்து பூஜை நடத்த வேண்டும் என அனைத்து மடாதிபதிகளும் சேர்ந்து முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.