தமிழகத்தில் தசபுஜ ஐயப்பன் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா? அங்கு வழிபட்டால் என்ன நன்மை தெரியுமா?

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தேவிப்பட்டணம் செல்லும் வழியில் 1 கி.மீ. தொலைவிலுள்ளது ஐயப்பன் கோயில்.


இங்கு ஐயப்பன் பஞ்சலோக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சபரிமலையை போல இக்கோயிலில் ஐயப்பன் உயர்ந்த இடத்திலுள்ள மூலஸ்தானத்தில் பாலகனாக அருள்கிறார். பஞ்சலோக மூர்த்தியான இவரது சிலை கேரளத்தில் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தின் ஐயப்பன் கோயில் எனவும் போற்றப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கும் நாட்களில் மட்டுமே இங்கும் நடை திறக்கப்படும். விசேஷம் முடிந்து நடை அடைக்கும்போது சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்து இடது கையில் தண்டம் வைத்து ஒரு தீபத்தை ஏற்றுகிறார்கள். ஐயப்பன் தவ நிலையில் இருப்பவர் என்பதால் இந்த ஏற்பாடு மீண்டும் நடை திறக்கும் போது விபூதி அலங்காரத்தை கலைத்து அதையே பிரசாதமாக தருகின்றனர்.

இங்குள்ள உற்சவர் சிலை சபரிமலையில் ஆறாட்டு உற்சவத்தில் பங்கேற்கும் உற்சவரின் அமைப்பிலேயே வடிக்கப்பட்டுள்ளது உற்சவரின் இடது கையில் வில், அம்பு இருக்கிறது.

ஐயப்பன் சன்னதிக்கு கீழ்தளத்திலுள்ள மண்டபச் சுவரில் ஐயப்பனின் பலவித சுதை சிற்பங்கள் உள்ளன. ஆரியங்காவு போல பூரணையுடன் குடும்ப நிலையை காட்டும் ஐயப்பனும், பின்புற சுவரில் அச்சன்கோவில் போல இரண்டு கால்களையும் மடக்கி வலக்கையில் அக்னியுடன் யோகப்பட்டை அணிந்து பூர்ண புஷ்கலாவுடன் ஒரு ஐயப்பனும் உள்ளனர். இடப்புறத்தில் காந்தமலையில் உள்ளது போல் பத்து கரங்களுடன் தசபுஜ ஐயப்பன் காட்சி தருகிறார். யோகப்பட்டை அணிந்து இருக்கும் இவர் கைகளில் மகாவிஷ்ணுவிற்குரிய சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, சூலம், கத்தி வைத்திருக்கிறார்.

ஐயப்பனை மணக்க விரும்பிய மஞ்ச மாதாவுக்கு தனி சன்னதி உள்ளதால் திருமணத்தடை உள்ள பெண்கள் இங்கு வந்து மஞ்சள்பொடி தூவி வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர் இதனால் திருமணத்தடை நீங்குவதாக நம்பிக்கை.