அந்தமான் நிகோபார் தீவு மக்களுக்கு ஆபத்து… பிரதமருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

அந்தமான் நிகோபார் தீவுகளில் கரோனா தொற்று நோயால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்; அவர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திரமோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.


சீத்தாராம்யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில், அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள உங்களது கட்சியின் (பாஜக) உறுப்பினர்களுக்கு நீங்கள் உரையாற்றியது தொடர்பான ஊடகச் செய்திகளை கவனித்தேன். அத் தீவுகளுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைய தொடர்பு வசதிகளை செய்துதருவதாக மீண்டும் அறிவித்திருக்கிறீர்கள்.

இது இந்திய அரசால் பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒரு பணியாகும். கிடைத்துள்ள தகவல்கள்படி, சென்னையிலிருந்து கடலுக்கு அடியில் கேபிள்களை கொண்டு செல்லும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. எனினும், அந்தமான் நிகோபார் தீவுகளின் மக்களது வாழ்வியல் நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மிகவும் வரவேற்கத்தக்கதே.

கொரோனா தொற்றுநோய் பரவலால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தத் தருணத்தில், அத்தீவுகளின் மக்களது வாழ்வைப் பாதுகாக்கவும், நிவாரணம் அளிக்கவும் மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். அந்தமான் தீவுகளுக்கும் நிகோபார் தீவுகளுக்கும் இடையே அதிக தூரம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒட்டுமொத்த தீவுகளுக்கும் சேர்த்து தலைநகர் போர்ட்பிளேரில் மட்டும் ஒரே ஒரு கொரோனா பரிசோதனை மையமும் ஒரே ஒரு கொரோனா சிகிச்சை மருத்துவமனையும் இருக்கிறது என்பதை கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இங்கு எடுக்கப்படும் பரிசோதனைக்கு முடிவுகள் தெரிய எட்டு நாட்களாகிறது. அதற்குள் சம்மந்தப்பட்ட நோயாளி மிகுந்த கவலைக்கிடமான நிலைக்குள் தள்ளப்படுகிறார்; மீட்கமுடியாத அளவிற்கு மூச்சுத்திணறல் உள்ளிட்டடி துயரங்களுக்கு ஆளாகிறார். மேற்கண்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றிய 18 மருத்துவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு அந்தமான் தீவுகளில் தான், இந்த ஒட்டுமொத்த பிரதேசத்தின் சரிபாதி மக்கள் வசிக்கிறார்கள். இத் தீவுகள், தலைநகர் போர்ட்பிளேரிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. இத் தீவுகளிலிருந்து, போர்ட்பிளேர் கொரோனா மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வந்தடைய பல நாட்கள் ஆகின்றன.

இந்த நிலைமையில் இத் தீவுகளில் கூடுதலான கொரோனா பரிசோதனை மையங்கள் உடனடியாக திறக்கப்படுவது அவசியமாகும்; பரிசோதனை எடுப்பதற்கும் முடிவுகளை அறிவிப்பதற்குமான காலம் கட்டாயம் குறைக்கப்பட வேண்டும்; அதற்கேற்றவாறு கூடுதல் வசதிகளை உடனே செய்திடவேண்டும்; இத் தீவுகளின் பல பகுதிகளில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனுடன் கூடிய சிகிச்சை மையங்கள் உடனடியாக திறக்கப்படவேண்டும்; போர்க்கால அடிப்படையில் இப்பகுதி மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் செய்யப்பட வேண்டும்.

அந்தமான் நிகோபார் தீவுகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள, மத்திய அரசின் நேரடி நிர்வாகம் நடக்கிய ஒரு யூனியன் பிரதேசமாகும். இத் தீவுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் ஏதுமில்லை. எனவே மத்திய அரசின் நிர்வாகத்தைத் தவிர உதவி கேட்பதற்கு இம்மக்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை எனவே அவசரமாக உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.