என் தங்கை நாடாளுமன்றத்தில் ஒரு புலி! தூத்துக்குடியில் சீறிய ஸ்டாலின்! கலங்கிய கனிமொழி!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தனது சகோதரி கனிமொழிக்காக தூத்துக்குடியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.


தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு மு க ஸ்டாலின் பேசியதாவது:- இந்தத் தொகுதியை தமிழிசை தேர்ந்தெடுத்தது கனிமொழியிடம் தோற்பதற்கு தான். ஸ்டெர்லைட் பிரச்சினை மீனவர் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளில் துரோகம் செய்த மத்திய அரசால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி மக்கள். அப்படி இருக்கையில் இந்த தொகுதியில் தமிழிசை போட்டியிடு கிறார் என்றால் அவர் தோற்கதானே செய்வார்.

கனிமொழிக்கு கலைஞரின் மகள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுமார் 12 ஆண்டு காலமாக அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி ஆக இருந்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 12 ஆண்டுகளாக அவர் செய்த சாதனைகள் சொல்லப்பட வேண்டும் என்றால் அதற்கு நேரம் பத்தாது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கனிமொழியை நாடாளுமன்ற புலி என்று சொல்வார்கள். அவர் இந்த தேர்தலில்தான் தூத்துக்குடிபுலி என்பதை நிரூபிப்பார். எம்பி என்பதைத் தாண்டி சமூக ஆர்வலர், பண்பாட்டாளர் கவிஞர் என பன்முகத்தன்மை கனிமொழிக்கு உண்டு.

கனிமொழியை போல் ஒரு தகுதியான வேட்பாளர் தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்க மாட்டார்கள். கனிமொழியை தூத்துக்குடி மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். இதனை கேட்டு அவ்வப்போது கனிமொழி கண்கலங்கினார்.