சுதீஷ் - பிரேமலதாவால் மீண்டும் மீண்டும் கேவலப்படும் கேப்டன்!

தப்பை சரியா செய்யாம மீண்டும் மீண்டும் தப்புத்தப்பாக செய்து வருகிறார் சுதீஷ். ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் பேசுவது அனைத்துக் கட்சிகளும் கூட்டணி நேரத்தில் கடைபிடிக்கும் நடைமுறைதான்.


ஆனால், பாரதப்பிரதமர் நரேந்திரமோடிக்கு அருகே நிற்கக்கூடிய வாய்ப்பு தே.மு.தி.க.வுக்கு கிடைக்க இருக்கும்போது, மாற்றுக் கட்சியை சந்திப்பது எத்தனை தவறு என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும். அதுவும் கூட்டணிக் கதவை தி.மு.க. மூடிவிட்ட பிறகு அங்கே போய் நுழைவது அநாகரீகம் என்பது கூட தெரியாமல் போனதுதான் உச்சபட்ச கொடுமை.

அதனால் விஜயகாந்த் கட்சியை நேற்று எல்லோரும் கழுவிக்கழுவி ஊற்றிவிட்டார்கள். இந்த கேவலத்தை எல்லாம் சகித்துக்கொண்ட அ.தி.முக. இப்போதும், எங்கள் கூட்டணிக் கதவு திறந்தே கிடக்கிறது என்று ஜெயக்குமார் மூலம் அறிக்கை விட்டது. 

அமைதியாக போய் பேச்சுவார்த்தையை முடித்து கையெழுத்துப் போட்டு கெத்துக் காட்டுவதுதான் இப்போது தே.மு.தி.க.வுக்கு புத்திசாலித்தனம். ஆனால், புத்திசாலித்தனமாக பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவெடுத்தார் சுதீஷ்.

நேற்று துரைமுருகனை சந்தித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் சொந்தக் காரணத்திற்காக சந்தித்தனர். அதில் அரசியல் எதுவும் இல்லை. ஆனால், எங்களை அவமானப்படுத்தும் வகையில் பத்திரிகைகள், மீடியாக்கள் செயல்படுகிறது என்று பேட்டி கொடுத்தார்.

இதைக் கேட்டு துரைமுருகன் சும்மா இருப்பாரா? அந்த நிர்வாகிகளை எனக்கு யாரென்றே தெரியாது, சொந்தக் காரணத்துகாக சந்தித்தார்கள் என்றால் எதற்காக சீட் குறித்துப் பேசினார்கள். ஏதோ நடு ரோட்டில் நிற்பதால் இப்படி பேசவேண்டிய நிர்ப்பந்தம். அதனால் மாற்றிமாற்றிப் பேசுகிறார்கள். போனால் போகட்டும் என்று மீண்டும் கிண்டலும் நக்கலுமாக பதில் சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று துடைத்துக்கொண்டு போவது ஒரு வகை. அல்லது உண்மையில் போனோம் என்று ஒப்புக்கொள்வது இன்னொரு வகை. இந்த இரண்டையும் செய்யாமல் மீண்டும் மீண்டும் விஜயகாந்தை கேவலப்படுத்துவதற்காகவே வேலைகள் செய்துவருகிறார் சுதீஷ்.

விஜயபிரபாகரன் கட்சியை அழித்துவிடுவார் என்று சொன்னார்கள். ஆனால், அந்தக் காரியத்தை சுதீஷே செய்துவிடுவார் என்றுதான் தெரிகிறது. விஜயகாந்துக்கு இதெல்லாம் தெரியுமோ... தெரியாதோ... பாவம்தான்.