தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இலவச குடிநீர் வழங்கியது அப்பகுதி மக்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இலவச குடம்! விலையில்லா தண்ணீர்! கொளத்தூரின் தாகம் தீர்க்கும் ஸ்டாலின்!

திமுக தலைவரின் சொந்தத் தொகுதியானது கொளத்தூர். இந்த தொகுதி வடசென்னையில் அமைந்துள்ளது. வில்லிவாக்கம், ஆர்கே நகர், பெரம்பூர் ஆகியன கொளத்தூருக்கு அருகேயுள்ள பிற சட்டமன்ற தொகுதிகளாகும்.
சென்ற வாரம் திராவிட முன்னேற்றக கழக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் அவற்றை எப்படி தீர்வு செய்வது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றும், இப்படியே கவனிக்காமல் சென்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும் திமுக தலைவர் கூறினார். மேலும் தங்களால் இயன்ற வகையில் கட்சி எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
இதற்கேற்றவாறு அவரே முன்னுதாரணமாக, நேற்று தன் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு பகுதிகளில் இலவசமாக குடங்கள் அளித்து தண்ணீரை வழங்கினார். ஜம்புலிங்கம் தெரு, பேப்பர் மில்ஸ் சாலை, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக பிளாஸ்டிக் குடங்கள் வழங்கி தண்ணீர் லாரிகளை வரவழைத்து அவற்றில் இலவசமாக தண்ணீர் நிரப்பினார்.
பின்னர் கொளத்தூர் தொகுதியில் சில நாட்களுக்கு முன்பு கட்டிடப் பணியின்போது காயமடைந்த 4 பேரை வீட்டிற்கு சென்று பார்த்தார். இந்த நிகழ்வின் போது, வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோன்று கலாநிதி வீராசாமி அவர்கள், திரு.வி.க நகரில் தன் சொந்த செலவில் தண்ணீர் லாரிகளை வரவழைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கினார்.
திராவிட முன்னேற்ற கழக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வருவது மக்களால் தகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.