முகக்கவசம் அணியுங்கள்! வீட்டிலேயே இருங்கள்! கொரோனாவுக்கு பலியான அன்பழகனின் கடைசி பேட்டி!

முக கவசம் அணியுங்கள்.. வீட்டிலேயே இருங்கள்.. என்று கொரோனாவுக்கு பலியான திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் அவர்கள் கடைசியாக அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. அதிலும் நம் தமிழகத்தில் அதிவேகமாக இந்த வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்த வைரஸ் தொற்றினால் புதிதாக தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. தற்போது அரசியல் பிரமுகர்கள் மத்தியில் முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன். 

அவருடைய பிறந்த நாளான இன்றைய தினத்திலேயே அவரது இறந்த நாளும் அமைந்துள்ளது என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய உடலில் ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்தும் மக்களுக்காக அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் நம் தமிழகத்தில் பரவ ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை மக்களிடம் கூறி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.

அப்படியாக திரு. அன்பழகனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், எதற்காக நாம் ஊரடங்கு செய்து இருக்கோம் என்றால், நோய்க் கிருமியானது 20 நாட்கள் தொற்று பாதித்தவரின் உடலில் தங்கியிருக்கும். அவர்களை 20 நாட்கள் தனிமை படுத்துவதன் மூலமாக அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க இயலும். அதற்குப் பின்பு அவர்கள் ஆறு மாதத்திற்காவது முககவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஆகையால் தனித்திருந்தால் இந்த நோயிலிருந்து கட்டாயம் வெளிவந்து விடமுடியும்.

எனக்கு இப்பொழுது 62 வயதாகிறது. என்னுடைய மருத்துவர் பொதுவாகவே அறுவை சிகிச்சை செய்தவர்களை இந்த கொரோனா எளிதில் தாக்கும் ஆகையால் என்னை வெளியே செல்லக்கூடாது என்று எச்சரித்த பட்சத்திலும் நான் தினம் தோறும் ஒரு நிகழ்ச்சி என்ற விகிதத்தில் கலந்து கொண்டு தான் வீடு திரும்புகிறேன். மக்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். இந்த நோய் தொற்றுக்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆகையால் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள் என்றால் தள்ளி நிற்பது ஆகும். தயவு செய்து அனைவரும் முகக் கவசங்கள் அணியுங்கள் மற்றும் தனித்து இருங்கள். தனித்து இருந்தால் மட்டுமே இந்த நோயை நம்மால் விரட்ட முடியும்.

இருமல் தும்மல் ஆகியவை இருப்பவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள். உங்கள் குடும்பத்தினரை தவிர மற்ற அனைவரிடமிருந்தும் தள்ளி இருங்கள். அவ்வாறு செய்தால் இந்த நோயின் பிடியில் இருந்து நாம் எளிதில் தப்பிக்கலாம் என்று மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கடைசியாக அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். தற்போது கடைசியாக இவர் அளித்த இந்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.