கொரோனா நோயால் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் உயிரிழந்தார்! பிறந்த நாளன்றே மறைந்த பரிதாபம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஜெ அன்பழகன். இவருக்கு கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டியூட் அண்ட் மெடிகல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு உள்ள அறிகுறிகளை வைத்து மருத்துவர்கள் கொரோனோ பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.

ஜெ அன்பழகன் அவர்களுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக உடலில் வேறு சில பிரச்சனைகளும் இருந்து வந்துள்ளன. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. மேலும் ஜெ. அன்பழகன் அவர்களுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியது.

கடந்த சில நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாட இருந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தனது பிறந்த நாள் அன்றே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.