மன உளைச்சல்..! ஸ்டாலினுக்கு டாடா..! அதிமுகவிற்கு தாவ தயாராகும் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்..?

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆவார்.


ஆரம்ப காலத்தில் அதிமுகவில் இருந்த இவர் ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கியவர் ஆவார். இவர் அதிமுக ஆட்சியில் 2001 ஆம் ஆண்டு கால்நடை துறை மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற துறையின் அமைச்சராக இருந்தார். 2009 ஆம் ஆண்டு அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் எந்த கட்சியில் இருந்தாலும் திருச்செந்தூர் தொகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். 

எனினும் திமுகவில் சேர்ந்த பிறகும் கூட அக்கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்து வந்த மறைந்த பெரியசாமி என்பவரை எதிர்த்து அவரால் அரசியல் செய்ய முடியவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் அழகிரியின் ஆதரவாளராக இருந்து வந்ததால் அவர் கட்சித் தலைமையிடம் பெரியசாமி பற்றி கூறும் புகார்களுக்கு மேலிடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கட்சி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறாமல் அவர் அமைதி காத்து வந்தார்.இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா அவர்கள் விடுதலை ஆனபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்த அனிதா ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பப் பட்டால் திருச்செந்தூர் தொகுதியில் எம்எல்ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்யத் தயார் என்று ஆதரவு தந்தார்.இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். 

இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் மீண்டும் இணைய முயற்சி செய்தார். ஆனால் அதிமுக தலைமையில் இருந்து ஒப்புதல் வராத காரணத்தினால் மீண்டும் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் இடம் மன்னிப்பு கேட்டதால் திமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 

உடல்நலக்குறைவால் பெரியசாமி இறந்த பிறகும்கூட அவரது மகளான தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவனிடம் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தற்போது வரை மோதல் நிலவி வருகிறது. தன் மீது திமுக தலைமைக்கு முழு நம்பிக்கை வராததை அறிந்துகொண்ட அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது அதிமுகவுக்கு தாவும் முயற்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமே தற்போது அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்கு தான் என்று கூறப்பட்டு வருகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது அவர் வருமானத்திற்கு அதிகமாக மதுரையில் சொத்துக்கள் வாங்கியதாக அவர் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்களான மனைவி, மகன்கள் மற்றும் சகோதரர்கள் மீது ஊழல் தடுப்புத் துறை சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட பிரிவுகளில் படியே இவரின் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதால், இந்த வழக்கில் இருந்து தப்பிப்பது கடினம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவரது மகன்கள் மற்றும் சகோதரர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால் அனிதா ராதாகிருஷ்ணன் கலக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆகையால் அதிமுக அமைச்சர் ஒருவரின் மூலம் அதிமுக தலைமையிடம் பேசி நிலைமையை எடுத்துக் கூற முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினரிடம் கேட்டபோது வழக்கு சரியாக தான் போய் கொண்டிருக்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவுடன் பேச முயன்ற வருகிறார் என்பதில் உண்மை எதுவும் இல்லை என்று அவரது தரப்பினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.