உதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க! திருப்பூரில் தெறிக்கவிட்ட சின்ன கேப்டன்!

தேமுதிகவின் முப்பெரும் விழாவில் விஜயகாந்தின் மகன் பேசியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தேமுதிகவின் முப்பெரும் விழாவானது நேற்று திருப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய சிகிச்சை காரணமாக அமெரிக்கா சென்று சில நாட்கள் முன்னர் தான் இந்தியா திரும்பினார். 

விஜயகாந்த் இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்வாரா என்ற தொண்டர்களின் ஏக்கத்தை நீக்கும் வகையில் அவர் முப்பெரும் விழாவில் சீரும் சிறப்புமாக கலந்து கொண்டார்.

அந்த விழாவில் அவருடைய மகனான விஜய பிரபாகரன் வீர உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர்கள் என்னிடம் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களை வெகுவாக திமுகவின் பக்கம் சேர்க்கிறாரே என்று கேட்டனர். அதற்கு நான் அளித்த பதில், "திமுக மிகவும் வயதான கட்சி.

அதனால்தான் இளைஞர்களே கட்சியில் சேர்க்கின்றனர். ஆனால் நம் கட்சி என்றுமே இளைஞர்களால் நிரப்பப்பட்டது. நம் இளைஞரணி செயலாளராக நல்லதம்பி அற்புதமான பணியில் ஈடுபட்டு வருகிறார். திமுக விரைவில் முடிந்து விடப்போகிற எக்ஸ்பயரி டேட் நெருங்கும் கட்சி.

அதனால் நாம் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லை. நம் தலைவர் கூடிய சீக்கிரம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தூள் கிளப்புவார். கூடிய விரைவில் மக்களின் முன் நீண்ட உரையாற்றுவார். என் தாயார் ஜான்சி ராணியை போன்று தலைவரை அமெரிக்காவில் இருந்து மீட்டு வந்துள்ளார். நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள். வருங்காலத்தில் ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு கிராமத்திலும் கேப்டன் உரையாற்றுவார்" என்று உரையாற்றினார்.

இந்த உரையானது தேமுதிகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.