எந்த நேரமும் வெடிக்கும் நிலையில் தி.மு.க. – காங்கிரஸ் உறவு. இன்று புதுச்சேரி, நாளை தமிழகம்..?

இழுத்துக்கோ, பறிச்சுக்கோ என்ற நிலையில்தான் தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான உறவு இருக்கிறது. புதுவையில் இந்த கூட்டணி விவகாரம் வெளிப்படையாக வெடித்தே விட்டது. தமிழகத்திலும் சிக்கலில்தான் உள்ளது.


புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளாக திமுக அதிகாரத்தில் இல்லை. காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. இப்படியே விட்டால் திமுகவிடமிருந்து புதுவை முழுமையாக பறிபோய்விடும் என்கிற எண்ணம் அந்த கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் காங்கிரசில் நிலவும் கோஷ்டிபூசல் வரும் தேர்தலில் வெற்றிவாய்ப்பை காவு வாங்கிவிடும் என்கிற அச்சமும் திமுகவினரைப் பிடித்து ஆட்டுகிறது.

இதன் காரணமாக கூட்டணியிலிருந்து காங்கிரஸை கழற்றிவிட வேண்டுமென திமுக தலைமைக்கு அந்த கட்சியின் புதுவை நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாத ஸ்டாலினிடம் பீகார் தேர்தலுக்குப் பிறகு மனமாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸை வெளியேற்றினால் என்ன மாதிரியான ரிசல்ட் கிடைக்கும் என ஐபேக் மூலம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில் சாதகமான முடிவுகள் கிடைக்க, புதுவை கட்சி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தத் தகவல் காங்கிரஸ் தரப்பை எட்ட, அண்மையில் சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்தார் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி. நாராயணசாமி எவ்வளவோ வலியுறுத்தியும் கூட்டணி தொடர்வது பற்றி ஸ்டாலின் உத்தரவாதம் எதையும் கொடுக்கவில்லையாம். நொந்துபோன நாராயணசாமி இது பற்றி தமிழக மற்றும் டெல்லி தலைமைகளுக்குத் தகவல் தந்திருக்கிறார்.

திமுக பாதைமாறி பயணிக்க இருப்பதை ஏற்கனவே யூகித்திருந்த காங்கிரஸ் மாற்று ஏற்பாடுகளில் இப்போது தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த புதுவை காங்கிரஸின் முக்கிய நிர்வாகி ஒருவர், ‘’ தமிழகத்தில் காங்கிரஸை விட திமுக எப்படி வலிமையானதோ அதேபோல புதுவையில் திமுகவை விட காங்கிரஸ் வலிமையானது. இந்த உண்மையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்’ என்றார்.

இப்போது புதுவையில் வெளிப்பட்டிருக்கும் இந்த கோஷ்டி மோதல் காரணமாக, விரைவில் தமிழகத்திலும் சிக்கல் வரும் என்கிறார்கள்.