உடன் பிறப்புகளை ரத்தத்தின் ரத்தங்களாக மாற்றிய மு.க.ஸ்டாலின்! உண்மையில் நெகிழ வைக்கும் செயல்!

திமுகவின் ரத்ததான செயலியை தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் அறிமுகப்படுத்திய சம்பவமானது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரத்ததான செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியை திறந்து வைப்பதற்காக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். 

இந்த செயலியானது ரத்ததானம் செய்ய நினைப்பவர்களும், அவசரமாக ரத்தம் தேவைப்படுபவர்களின் விவரங்களை சேகரித்து கொள்ளும். விவரங்களை கொடுத்த பின்னர் வல்லுநர்கள் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு ஆலோசனை செய்வர். 24 மணி நேரமும் மக்களுக்கு உதவுவதற்காக வல்லுநர்கள் தயாராக இருப்பர் என்று கூறப்படுகிறது.

இந்த செயலியினை தமிழகம் முழுவதும் பரப்புவதற்காக திமுக மருத்துவர் அணி திட்டமிட்டுள்ளது. மேலும் ரத்தம் தேவைப்படுபவர்களும், ரத்த தானம் செய்ய விரும்புபவர்களும்  "DMK BLOOD DONATION APP" மூலம் பயனடைய வேண்டும் என்று திமுகவின் மருத்துவ அணி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த முயற்சியை பலதரப்பட்ட பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். பொதுவாக கலைஞர் திமுக தொண்டர்களை உடன் பிறப்புகளே என்று அழைப்பார். எம்ஜிஆர் அதிமுக தொண்டர்களை ரத்தத்தின் ரத்தங்களே என்று அழைப்பார். அந்த வகையில் உடன் பிறப்புகள் அனைவரையும் இந்த செயலி மூலம் ரத்ததானம் கொடுக்க வைத்து ரத்தத்தின் ரத்தமாக்கியுள்ளார் ஸ்டாலின்.