பிரிட்டிஸ் எம்பயர் மதுபான ஆலை ஜெயமுருகனை வளைத்த வருமான வரித்துறை! பதற்றத்தில் திமுக பெரும் புள்ளிகள்!

பிரிட்டிஸ் எம்பயர் மதுபானத்தை தயாரித்து விநியோகம் செய்யும் எஸ்என்ஜே நிறுவனம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.


தமிழகத்தில் மிகவும் பிரபலமான மதுபான வகை பிரிட்டிஸ் எம்பயர். கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மதுபானம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமானது. இதனை தயார் செய்து விற்பனை செய்வது ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமான எஸ்என்ஜே நிறுவனம் ஆகும். இதற்கான ஆலை சென்னை அருகே படப்பையில் உள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் இந்த மதுபான ஆலை துவங்கப்பட்டது. அதாவது அப்போது தமிழகத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த சசிகலாவின் மிடாஸ் நிறுவனத்திற்கு போட்டியாக திமுக பெரும்புள்ளிகளால் கொம்பு சீவி விடப்பட்டது தான் எஸ்என்ஜே நிறுவனம்.

எதிர்பார்த்தபடியே மிடாஸ் நிறுவனத்திற்கு எஸ்என்ஜே கடும் போட்டியாக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சியில் இல்லாத நிலையிலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ஆகும் சரக்கில் 15 சதவீதம் எஸ்என்ஜே டிஸ்டிலரிஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது தான்.

அந்த அளவிற்கு தொழிலில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் ஜெயமுருகன் தற்போது வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளார். தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என தென் மாநிலங்களில் ஜெயமுருகன் தனது மதுபான ஆலை தொழிலை விரிவுபடுத்தியிருந்தார். 

வேலூர் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த மறுநாள் எஸ்என்ஜே நிறுவனத்திற்குள் வருமான வரித்துறை புகுந்திருப்பதால் இதற்கு அரசியல் முடிச்சு போடப்படுகிறது. எஸ்என்ஜேவின் ஜெயமுருகன் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. 

எனவே திமுகவின் வேலூர் தேர்தல் செலவில் ஜெயமுருகனுக்கு கணிசமான பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே தான் அவரது நிறுவனத்திற்கு வருமான வரித்துறை நுழைந்துள்ளதாக கூறுகிறார்கள். இதனால் திமுக பெரும்புள்ளிகள் சிலரது வயிறு கலங்கியுள்ளது.

ஏனென்றால் திமுகவிற்கு ஒரு காலத்தில் தங்கச் சுரங்கமாக இருந்தவர் இந்த ஜெயமுருகன். இவர் தயாரிப்பில் தான் கலைஞர் உளியின் ஓசை படத்தை எடுத்தார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருக்கையில் ஜெயமுருகனை வருமான வரித்துறை வளைத்தால் திமுகவினர் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்.