ஓட்டு கேட்க மட்டும் இந்தி வேணுமா? விவகாரமாகும் திமுகவின் போஸ்டர்!

இந்தியில் அச்சிடப்பட்டிருந்த திமுக பேனரை பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.


தமிழகத்தில் தற்போது மொழிப்போராட்டங்கள் கடுமையாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக போராட்டத்தை அறிவித்த பின்னர் கைவிட்டது. இது அரசியல் வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியில் அச்சிடப்பட்ட திமுகவின் பேனரை பாஜகவினர் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் கிண்டலடித்து வருகின்றனர். அந்த பேனர் எப்போது எங்கு அச்சிடப்பட்டது என்று தெரியவில்லை. அந்த பேனர் இந்தியில் பொறிக்கப்பட்டிருந்ததை அடுத்து தமிழக பாஜகவினர் தங்கள் ட்விட்டரின் மூலம் திமுகவினரை கலாய்த்து வருகின்றனர்.

"ஒரே நாடு ஒரே மொழி" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சில நாட்களுக்கு முன்னர் பெரும் வைரலானது. இந்த கருத்துக்கு முதன்முதலில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர் ஸ்டாலின் மட்டும் தான். இதற்கு திமுகவை கலாய்ப்பதற்காக தமிழக பாஜகவினர் இந்த பேனரை ட்விட்டரில் போட்டனர். 

மேலும், "ஓட்டு அரசியலில் இந்தி திணிப்பை நிறுத்த இயலுமா. மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களுடைய வாழ்க்கையில் வலம் பெறவும், வியாபாரத்தை பெருக்குவதற்கும் இந்தியை பயன்படுத்தக்கூடாது என்று கூறுவது அராஜகமாகும்" என்று பாஜகவினர் திமுகவை கிழித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.