கரூரில் திமுக – அதிமுகவினர் பயங்கர மோதல்! நாஞ்சில் சம்பத்தை ஓட ஓட விரட்டிய அதிமுகவினர்!

கரூர் வெங்கமேட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திமுக கூட்டணியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதற்காக அங்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் ஏராளமாக திரண்டிருந்தனர்.


பிரச்சாரத்தை முடித்து விட்டு திமுக கூட்டணி தொண்டர்கள் புறப்பட்டதும், அதிமுக  சார்பில் அதே  இடத்தில் பிரச்சாரம் தொடங்கியது.  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை ஆகியோர் வெங்கமேட்டில் வாக்கு சேகரிக்க வந்தனர்.

இதற்காக அங்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் வெங்கமேட்டில் குவியத் தொடங்கினர். அந்த சமயத்தில் அங்கிருந்து சென்று கொண்டிருந்த திமுகவினர் – அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 அதிமுக, திமுகவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒரு கலத்தில் கைக்கலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.  கற்கள் வீசப்பட்டன.

இதில் இருவருக்கு  மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.  அந்த சமயத்தில், பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது அவர் வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது,. 

இதில் நாஞ்சில் சம்பத்துக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கி நாஞ்சில் சம்பத் ஓடியதாக கூறுகிறார்கள்.