திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி பதவி பறிப்பு..! காரணமே கூறாமல் தலித் நிர்வாகிக்கு ஸ்டாலின் கொடுத்த ஷாக்!

காரணமே கூறாமல் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமியை நீக்கியிருப்பதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகராகவும் இருந்தவர் வி.பி.துரைசாமி. நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த இவர் திமுகவின் தலித் முகமாகவும் இருந்து வந்தார். அண்மையில் வி.பி.துரைசாமி திடீரென பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசினார்.

தமிழக அரசியல் முகாமில் எலியும் பூனையுமாக திமுக - பாஜக இருந்து வரும் நிலையில் பாஜக தலைவரை திமுகவின் உயர்மட்ட நிர்வாகியான வி.பி.துரைசாமி சந்தித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி.துரைசாமி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.பி.துரைசாமிக்கு பதில் திமுக துணைப் பொதுச் செயலாளராக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட வி.பி.துரைசாமி முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தலித் சமுதாயத்தை சேர்ந்த அந்தியூர் செல்வராஜூக்கு ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தார்.

இனியும் திமுகவில் தனக்கு வாய்ப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்டே துரைசாமி பாஜகவில் ஐக்கியமாகும் திட்டத்துடன் முருகனை சந்தித்துள்ளார். இதன் காரணமாகவே வி.பி.துரைசாமியை ஸ்டாலின் பதவி நீக்கம் செய்துள்ளார். ஆனால் இதற்கான அறிக்கையில் எதற்காக துரைசாமி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை ஸ்டாலின் தெரிவிக்கவில்லை.