தி.மு.க. கூட்டணியில் ஸ்டாலின் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட அறிவிப்பு.

விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் - அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தி.மு.க. கூட்டணிகள் முடிவு செய்திருக்கின்றன.


மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள; விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் - வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும் - கூட்டாட்சித் தத்துவத்திற்குப் புறம்பானதுமான மூன்று சட்டங்களுக்கும், தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கிறது.

மேலும், மாநிலங்களவையின் விதிகளை மீறி நிறைவேற்றியிருக்கும் இந்த சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் - அவற்றை ஆதரித்திருக்கும் மாநில அ.தி.மு.க. அரசுக்கும், இந்தக் கூட்டம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

“அத்தியாவசியத் திருத்தச் சட்டத்தில்” “12 மாதங்கள்”" 100 சதவீத விலை ஏற்றம் உள்ள தோட்டக் கலை விளை பொருட்கள், 50 சதவீத விலை ஏற்றம் உள்ள அழுகாத விவசாய விளைபொருட்கள் அல்லது சராசரியாக 5 வருடங்கள் விலையேற்றம் உள்ள விளை பொருட்களுக்கு மட்டுமே “இருப்பு வரம்பு கட்டுப்பாடு விதிக்க முடியும் என்று கார்ப்பரேட்களுக்கு சாதகமான நிபந்தனைகளை விதித்திருப்பது, “சுதந்திரமான வேளாண் சந்தையில்” குறுக்கிட்டு, அதன் இயல்பான போக்கைப் பாதித்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச விலை கூட கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும்.

“விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)சட்டத்தின்”மூலம்; “5 வருடம் வரைகூட கார்ப்பரேட் நிறுவனங்கள் - விவசாயிகளுடன் பண்ணை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்”, “ அதை நீட்டித்துக் கொள்ளலாம்”, “அந்த ஒப்பந்த மாதிரியை மத்திய அரசு அனுப்பி வைக்கும்”, “ பண்ணை ஒப்பந்தத்தில் விளைபொருட்கள் விநியோகம் செய்ய வேண்டிய நேரம், விலை, தரம், அளவு, தர நிர்ணயக் கட்டுப்பாடுகள்”, “ அந்தத் தரம் பற்றி தகுதியுள்ள மூன்றாவது நபர் சான்றிதழ் அளிக்க வேண்டும்”, “எப்போது வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்”, “விளைபொருட்களை கொள்முதல் செய்யும் போது, வாங்கும் நிறுவனம் அப்பொருள் குறித்து கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்”, “ஒப்பந்தத்தில் பிரச்சினை எழுந்தால், அது குறித்து 90 நாட்களில் தீர்வு காணுவதற்கு, அதிகாரிகளை தலைவராகக் கொண்ட அமைப்புகள்” என்ற பிரிவுகள் அனைத்தும், குறு - சிறு - நடுத்தர விவசாயிகள் மட்டுமல்லாமல், பெரும் விவசாயிகளுக்கேகூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று இக்கூட்டம் கருதுகிறது.

 “விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின்” கீழ்; “மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்குள்ளும் மின்னணு வர்த்தகத்தை அனுமதித்து, கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் மின்னணு வர்த்தக மேடை அமைப்பது”, “விவசாயிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண் கட்டாயம்”, என்பவை மாநிலத்தில் உள்ள சட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள், உழவர் சந்தைகள் போன்றவற்றை அறவே ஒழிக்கும் நடைமுறைகள் ஆகும்.

“வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தப்படுதலை ஒழுங்குபடுத்தும் மாநில அரசின் சட்டங்கள் மேற்கண்ட சட்டத்தைக் கட்டுப்படுத்தாது”, “ஒரு குக்கிராமத்தில் உள்ள விவசாய சந்தை நிலவரம் குறித்து மத்திய அரசு தெரிவிக்கும் முறை” என்பது, மாநிலங்களின் கையில் உள்ள பட்டியல் 14, 15, 16 மற்றும் 18 - மாநிலத்திற்குள் நடக்கும் வர்த்தகம், வணிகம் (பட்டியல் 26) போன்ற அதிகாரங்களையும் மத்திய அரசே கைப்பற்றிக் கொள்ளும் மேலாதிக்கப் போக்கு என்றே இந்தக் கூட்டம் கருதுகிறது.

 “விவசாயம் சம்பந்தமான இந்த மூன்று சட்டங்களும், விவசாயிகளிடமிருந்து விளை பொருள்கள் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு விடுகின்றன. அதன்மூலம், உணவுப் பாதுகாப்பு காவு கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கும் விலைப் பாதுகாப்பு கொடுப்பதை அரசாங்கம் கை விட்டுவிட்டு, விவசாயிகளை தனியார் வர்த்தகப் பெரும் புள்ளிகளிடம் தள்ளிவிடுகிறது” என்று, அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையை இந்தக் கூட்டம் வழிமொழிகிறது. செப்டம்பர் 25அன்று நடைபெறவிருக்கும் அவர்களது போராட்டத்தை வரவேற்கிறது.

ஏற்கனவே பீஹாரில் தோற்று விட்ட இந்த “மாதிரியை”- தமிழகத்தில் திணித்து விவசாயிகளை வஞ்சிக்கும் பா.ஜ.க. - அதிமுக அரசுகளின் போக்கு மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல- சூழ்ச்சியான இந்த சட்டங்களின் வளையத்திற்குள் ஏழை விவசாயிகளை சிக்க வைத்து, அவர்களைத் தொடர்ந்து துன்பங்களுக்குள்ளாக்கி, கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் மேலும் கேள்விக்குறியாக்கும் முயற்சி என்பதால், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் - அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும்;

2020 செப்டம்பர் 28 (திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும் - நகராட்சி மற்றும் ஒன்றியங்களிலும் “கொரோனா” பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் சார்பில், “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.