திருவாரூர் தேர்தல் ரத்து! டி.ராஜாவுக்கு எம்.பி பதவி பரிசு! தி.மு.கவின் தாராளம்!

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்தாக காரணமாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜாவுக்கு எம்.பி பதவியை மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


திடீரென திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் என்றதும் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார். காரணம் ஆளும் கட்சியை மீறி எதிர்கட்சியான தி.மு.க திருவாரூரில் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம் என்பது ஸ்டாலினுக்கு நன்றாக தெரியும். மேலும் மோடியையும் கடந்த சில நாட்களாக ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் தொகுதியில் மிகக் கடுமையான கெடுபிடிகளை தி.மு.க எதிர்கொள்ள நேரிடும்.

   இதனால் தான் மு.க.ஸ்டாலினையே வேட்பாளராக்கி வெற்றிக்கனியை பறிக்கலாம் என துரைமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனை கூறினர். ஆனால் ஸ்டாலின் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. இதனை தொடர்ந்து தான் தேர்தலை ரத்து செய்ய வைப்பதற்கான வேலையில் தி.மு.க தரப்பு இறங்கியது. நேரடியாக தி.மு.கவே களம் இறங்கினால் இடைத்தேர்தலை கண்டு ஸ்டாலின் பயப்படுவதாக விமர்சனங்கள் எழும்.

    இதனால் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா மூலம் தி.மு.க காய் நகர்த்தியது. அதிலும் டி.ராஜாவின் எம்.பி பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அந்த எம்.பி பதவியை மீண்டும் பெறும் எண்ணிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எம்.எல்.ஏக்கள் இல்லை. ஆனால் தி.மு.க மனது வைத்தால் டி.ராஜாவால் எம்.பி பதவியில் தொடர முடியும்.

   இந்த நிலையில் தான் தேர்தலை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினார் டி.ராஜா. உச்சநீதிமன்றத்தை அணுகியதோடு மட்டும் அல்லாமல் தேர்தல் ஆணையத்திற்கும் நேரிலேயே சென்று இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான காரணத்தை அடுக்கினார் டி.ராஜா. அவர் கொடுத்த மனுவின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தலாமா? வேண்டாமா? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கருத்து கேட்டார்.

   தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு டி.ராஜாவின் முயற்சி தான் காரணம் என்பதால், தேர்தல் ரத்து தகவல் வெளியானதுமே டி.ராஜாவை ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜூலை மாதம் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் டி.ராஜாவுக்கு எம்.பி பதவியை விட்டுக் கொடுப்பது குறித்து ஸ்டாலின் உறுதி அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.