திமுகவில் வாரிசுகள் 9 பேருக்கு சீட்டு! வேட்பாளர் நேர்காணல் கண் துடைப்பு! அம்பலமான ஸ்டாலின்!

கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்ததுபோக திராவிட முன்னேற்றக் கழகம் 20 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் யாருக்கு சீட் என்பதை இரண்டு நாட்களில் அறிவிக்க இருக்கிறோம் என்று இன்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.


அதாவது வேட்பாளர் நேர்காணல் நாளைதான் தொடங்கவே செய்கிறது. அதற்குள் பட்டியல் தயாராக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் விருப்பமனு நேர்காணல் என்பது கண் துடைப்புதானா என்று தி.மு.க. தொண்டர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

ஏனென்றால் இந்த 20 தொகுதிகளில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில் வேட்பாளர் யார் என்பது இப்போதே பலருக்கும் தெரியும். அந்த அளவுக்கு வாரிசுகளுக்கு இந்த முறை முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. மேலும் முன்பு போட்டியிட்டவர்களே மீண்டும் போட்டியிடவும் செய்வார்கள். இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் என்றென்றும் ரோட்டில்தான் நிற்க வேண்டுமா என்று கொந்தளிக்கிறார்கள்.

யார் யாரெல்லாம் வாரிசுகள் உள்ளே வருகிறார்கள் என்பதைப் பாருங்கள். சென்னை தி.நகரில் போட்டியிட்டு தோல்வியடைந்த என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி ஏதேனும் ஒரு சென்னை தொகுதி கொடுங்கள் என்று கெஞ்சி வருகிறார். இதுபோக கீழ்க்கண்ட பலரும் வாரிசு வரிசையில் இருக்கிறார்கள்.

1.வடசென்னை: கலாநிதி வீராசாமி இவர் ஆற்காடு வீராசாமியின் மகன்

2.மத்திய சென்னை: தயாநிதி மாறன் இவர் முரசொலி மாறனின் மகன்

3.தென் சென்னை: தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் மகள் மற்றும் தங்கம் தென்னரசு சகோதரி 

4.வேலூர்: துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்

5.திருவண்ணாமலை: கம்பன் இவர் எ.வ.வேலுவின் மகன் 

6.தூத்துக்குடி: கனிமொழி -இவர் கருணாநிதியின் மகள் 

7.கோவை :  பாரிமைந்தன் இவர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் 

8.கள்ளகுறிச்சி: பொன் கவுதம சிகாமணி - இவர் பொன்முடியின் மகன்

9. பெரம்பலூர் : கே.என்.நேருவின் மகன் அருண்

இதுதவிர உதயநிதி ஸ்டாலினை இப்போதே தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று அவரது கட்சியினர் கொடி பிடித்துவருகிறார்கள். அரக்கோணத்தில் என் மகனுக்கு சீட் கொடுங்கள் என்று ஜெகத்ரட்சகன் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். 

அதேபோல் பழைய மாஜிக்களுக்கு சீட் கொடுப்பதும் எந்த மாற்றமும் இல்லாமல் நடந்துவருகிறது. அதாவது தஞ்சாவூர் என்றால் பழனி மாணிக்கம், தர்மபுரிக்கு தாமரைசெல்வன், நீலகிரிக்கு ராசா ஸ்ரீபெரும்புதூருக்கு டி.ஆர்.பாலு என்பதெல்லாம் எழுதப்படாத சட்டம்.

இந்த முறை இரண்டு ராஜ்யசபா சீட் தி.மு.க.வுக்கு உறுதியாக உள்ளது. அதில் ஒன்று வைகோவுக்குப் போய்விட்டது. அடுத்தது நிச்சயம் சபரீசனுக்குத்தான் கொடுக்கப்படுமாம். 

ஆக, இப்படி இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டால், இத்தனை காலமும் தி.மு.க. கொடியை தூக்கிக்கொண்டு திரியும் தொண்டனுக்கும், லோக்கல் நிர்வாகிகளுக்கும் எப்போது மரியாதை செய்யப்போகிறது தி.முக. என்று கேட்கிறார்கள்.

ஸ்டாலின் நிதானிக்கவேண்டிய தருணம் இது.