இந்து மதத்தில் கேவலமான முறையில் திருமணம் நடைபெறுகிறது! ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை

இந்து மத வைதீக திருமணம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.


தி.மு.க. சார்பில் சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் அதில் உரையாற்றினார்.

 

வைதீக திருமணம் எப்படி நடக்கும் என அனைவருக்கும் தெரியும் என்ற அவர், மணமக்களை தரையிலோ பலகையிலோ உட்கார வைத்து புரோகிதர் ஒருவர் மந்திரத்தை சொல்லி திருமணத்தை நடத்தி வைப்பார் என கூறினார்.

 

மணமக்களுக்கு இடையில் நெருப்பை மூட்டி, அதில் இருந்து உருவாகும் புகையினால் மணமக்கள் மற்றும் திருமணத்தை பார்க்க வந்தவர்கள் என அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து பெரும் சோகம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் சூழலுக்கிடையே புரோகிதர் அந்தத் திருமணத்தை நடத்துவார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

புரோகிதர் சில மந்திரங்களைச் சொல்லுவார் என்ற ஸ்டாலின், கின்னரரையும், கெருடர்களையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் புரோகிதர் கூப்பிடுவார் என்றார். இஷ்ட அவதாரங்களையும்,  சில எக்ஸ்ட்ரா அவதாரங்களையும் கூட கூப்பிடுவார் என்றும் கூறினார். 

 

புரோகிதர் என்ன சொல்கிறார் என மணமக்களுக்கோ, திருமணத்துக்கு சென்றவர்களுக்கோ தெரியாது என்ற அவர் ஐயரை தனியாக கூப்பிட்டுக் கேட்டால் அவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.ஏனெனில் அந்த மந்திரங்களின் உட்பொருள் தெரிந்தால் உடம்பெல்லாம் நடுங்கும் அளவுக்கு கேவலமான அர்த்தங்கள் அவற்றில் இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் திருமண விழாவில் பேசிய இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.