கூடங்குளம் விஸ்வாமித்ரர் கோவிலில் பிரேமலதா நடத்திய ரகசிய யாகம்!

கூடங்குளம் விசுவாமித்திரர் கோவிலில் விஜயகாந்த் முழுமையாக குணமடைய வேண்டி அவரது மனைவி பிரேமலதா ரகசிய யாகம் ஒன்றை நடத்தியுள்ளார்.


நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஒரு சிறிய கடற்கரை கிராமமான விஜயாபதியில் அமைந்துள்ள மகாலிங்கசுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இந்த கோவிலை நோக்கி வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விசுவாமித்திரர் கோவிலில் ஒரு சிறப்பு யாகம் ஒன்றை நடத்தியுள்ளார் தனது கணவர் விரைவில் குணமடைய வேண்டும் என சிறப்பு யாகம் நடத்தப்பட்டதாக தெரிகிறது.  

இந்த கோவிலின் சிறப்பு யாதெனில் விசுவாமித்திரர் இழந்த தன்னுடைய சக்தியை மீண்டும் பெறுவதற்காக இந்த கோவிலில்தான் யாகம் நடத்தியதாக வரலாறு கூறுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த கோவிலின் சிறப்பு பற்றி அறிந்த நடிகர் விஜயகாந்த் தனது மனைவியுடன் இங்கு வந்து பல சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களை செய்து வழிபட்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர்தான் அரசியலில் உச்சம் அடைந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி பிரேமலதா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு யாகங்களை செய்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள பொதுமக்களிடம் தனது கணவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காகவே இத்தகைய சிறப்பு யாகங்களை செய்வதாக தெரிவித்துள்ளார்.