கட்சி நடவடிக்கையில் தலையிடாதே! பிரேமலதாவிடம் கர்ஜித்த கேப்டன்!

கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் தலைகுனிவு காரணமாக மனைவி பிரேமலதாவை கேப்டன் லெப்ட் அன்ட் ரைட் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


தேமுதிகவின் ஒட்டு மொத்த மாவட்டச் செயலாளர்கள் மட்டும் அல்ல பிரேமலதாவின் சகோதரரான சுதீஷ் மட்டும் அல்ல கேப்டன் கூட திமுகவுடன் கூட்டணி என்று தான் நிலைப்பாட்டில் இருந்தனர். ஆனால் பிரேமலதாவோ பா.ஜ.க  கூட்டணி என்று துவக்க முதலே பிடிவாதம் காட்டி வந்தார்.

பேச்சுவார்த்தையின் போது திமுகவும் சரி அதிமுகவும் சரி ஒரே மாதிரியான தொகுதிகளின் எண்ணிக்கையை மட்டுமே கூறின. திமுக 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்தது. அதிமுகவும் கூட 4 தொகுதிகள்தான் என்று தற்போது வரை கூறி வருகிறது.

ஆனாலும் திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பிரேமலதா ஆர்வம் காட்டாமல் அதிமுகவுடன் தொடர்ந்து பேசி வந்தார். இதனால கூட்டணி கதவை மூடிய திமுக தொகுதிப் பங்கிட்டை முடித்துவிட்டது.

இந்த நிலையில் அதிமுகவும் 4 தொகுதிகள் தான் என்று கைவிரித்துவிட்டது. இதனால் கேப்டன் தனது மாவட்டச் செயலாளர்கள் அனகை முருகேசன் மற்றும் இளங்கோவனை திமுகவிடம் தூது அனுப்பினார். அங்கு அவர்கள் துரைமுருகனை சந்தித்து பேசிவிட்டு திரும்பியுள்ளனர்.

அதற்குள் அதிமுகவுடன் தான் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகிவிடும் என்று சுதீஷ் பேட்டி அளித்தார். இதனால் கோபமான திமுக தரப்பு தேமுதிக தங்களிடமும் கூட்டணி குறித்து பேசியதாக உண்மையை போட்டு உடைத்துவிட்டது.

இதனால் திமுக மற்றும் அதிமுகவுடன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தேமுதிக மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் சுதீசை செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவுடன் ஓரிரு நாளில் கூட்டணி உறுதியாகிவிடும் என்று பிரேமலதா தான் கூற வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதனை தெரிந்து கடுப்பான கேப்டன், கட்சி தற்போது இப்படி சீரழிய காரணமே நீ தான், நீ இந்த விவகாரத்தில் தலையிடாதே என்று கர்ஜித்ததாகவும் இதனால் தான் இன்று தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் பிரேமலதா பங்கேற்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.