கூட்டணி பேச்சின் போது ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட துரைமுருகன்! போட்டுக் கொடுத்த சுதீஷ்!

கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஸ்டாலின் குறித்து துரைமுருகன் பேசியதை எல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் சுதீஷ் புட்டு புட்டு வைத்து வருகிறார்.


நேற்று ரகசியமாக சென்று தேமுதிகவினர் துரைமுருகனை சந்தித்து கூட்டணி குறித்து பேசிவிட்டு திரும்பினர். தேமுதிகவினர் ஊடகங்களை பார்த்து தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்தித்ததாக விளக்கம் அளித்தனர்.

ஆனால் துரைமுருகனோ தேமுதிகவினர் தன்னை நேரில் சந்தித்து கூட்டணிக்கு வருவதாக கூறியதாகவும் ஆனால் கொடுக்க தொகுதி இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறினார். மேலும் தேமுதிகவினரிடம் தனிப்படட் முறையில் பேச தன்னிடம் என்ன இருக்கிறது என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

இதனால் கடுப்பான தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், தானும் துரைமுருகனும் ஒரே ஊர்க்கார்கள் என்றார். கடந்த பல வருடங்களாக அரசியலுக்கு அப்பாற்பட்டு துரைமுருகனுடன் பழகி வருவதாகவும், கூட்டணி குறித்தும் பேசியுள்ளதாகவும் சுதீஷ் தெரிவித்தார்.

அப்போதெல்லாம் ஸ்டாலின் குறித்து துரைமுருகன் பேசியதை தான் வெளியே சொன்னால் அசிங்கமாகிவிடும் என்றும் சுதீஷ் கூறினார். இதனால் ஸ்டாலின் குறித்து துரைமுருகன் என்ன கூறினார் என்று கேட்க பலரும் ஆர்வமாகினர்.

இந்த நிலையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் ஸ்டாலின் குறித்து துரைமுருகன் பேசியதை கூறி அவற்றை ஊடகங்களுக்கு கசியவிட்டு வருகிறார் சுதீஷ். அதன் படி கடந்த வாரம் நடைபெற்ற கூட்டணி பேச்சின் போது தேமுதிக வரவில்லை என்றால் திமுகவால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று துரைமுருகன் கூறியதாக சுதீஷ் தெரிவித்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

இதே போல் ஸ்டாலினை எல்லாம் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பது தங்கள் தலைவிதி என்கிற ரீதியில் துரைமுருகன் பேசியதாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சுதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் கலைஞர் மகன் என்பதால் மட்டுமே ஸ்டாலின் தலைவராகிவிட்டதாகவும், ஆனால் தலைவருக்கு உரிய பக்குவம் அவரிடம் இல்லை என்று துரைமுருகன் தன்னிடம் குறைபட்டுக் கொண்டதாகவும் சுதீஷ் கூறி வருகிறார்.

இதுமட்டும் இல்லாமல் ஸ்டாலினின் தலைமை பண்பு குறித்தும் சுதீசிடம் துரைமுருகன் செம்மையாக கிண்டல் செய்துள்ளார். அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் சுதீஷ் அவிழ்த்து விட்டு வருகிறாராம்.