ஐயப்பன் மகிமை: வெளிநாட்டினரை இருமுடி கட்டி மலை ஏற வைத்தார்!

சபரிமலை


சபரிமலைக்கு தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இருமுடி கட்டி வந்துள்ள வெளிநாட்டினர் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

   செக்குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் தாமஸ் பீட்டர். இவரது தலைமையில் ஆண்கள் பெண்கள் என சுமார் 62 பேர் தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலை, ராமேஸ்வரத்தில் தங்கள் ஆன்மிக பயணத்தை நிறைவு செய்த செக் குடியரசை சேர்ந்த 62 பேரும் பேருந்து மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தனர்.

  62 பேருமே கருப்பு உடை அணிந்திருந்தனர். மேலும் ருத்திராட்சை மாலையும் அணிந்திருந்தனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கருப்பு உடை, ருத்திராட்சை மாலையுடன் தென்பட்டதால் அவர்களை அங்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் விநோதமாக பார்த்துச் சென்றனர். பின்னர் பீட்டர் தாமசிடம் சென்று விசாரித்த போது தான் அவர்கள் அனைவருமே ஐயப்ப பக்தர்கள் என்பது தெரியவந்தது.

   62 பேர் செக்குடிரசில் இருந்து ஆன்மிக பயணமாக வந்திருந்தாலும் 42 பேர் மட்டுமே விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளதாக பீட்டர் கூறினார். ஐயப்ப பக்தர்களை போலவே விரதம் இருந்து, அனைத்து விதிகளையும் பின்பற்றியே தாங்கள் வருடா வருடம் மலைக்கு செல்வதாகவும்த, தற்போது 6வது ஆண்டாக மலைக்கு செல்ல உள்ளதாகவும் கூறினர். இதற்காக ராஜபாளையம் பகுதியில் வைத்து வரும் 7ந் தேதி இருமுடி கட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

   சபரிமலை செல்லும் 42 பேரில் 20 பேர் பெண்கள் என்றும், அவர்கள் அனைவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று பீட்டர் கூறியுள்ளார். தாங்கள் சபரிமலையின் பாரம்பரியத்தை மதிப்பதாகவும், அதற்கு எந்த பங்கமும் ஏற்படக்கூடாது என்பதால் முன்கூட்டியே மலை ஏற கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் பீட்டர் தாமஸ் கூறியுள்ளார். சபரிமலைக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் வருவது தான் அதிகம்.

   ஆனால் செக் குடியரசு நாட்டில் இருந்து அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் வந்திருப்பது கடல் கடந்தும் அய்யப்பன் புகழ் ஓங்கியிருப்பதை காட்டுவதாக தமிழக அய்யப்ப பக்தர்கள் கூறினர். மேலும் செக் அய்யப்ப பக்தர்களுடன் அவர்கள் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.