ரூ.200 நோட்டுக்கு பதில் ரூ.500 நோட்டு! ஏடிஎம் எந்திரத்தில் குவிந்த மக்கள்!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் தாள்கள் வெளிவந்ததை அடுத்து வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.


சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியை அடுத்து பண்ணப்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஸ்டேட் பாங்க் சார்பாக ஏடிஎம் மையம் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஏடிஎம் மையம் சேலம் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் எந்நேரமும் பொதுமக்கள் இந்த ஏடிஎம் மையத்தை உபயோகப்படுத்துவது வழக்கம். மையத்தில் மொத்தம் மூன்று ஏடிஎம் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்ததாக தகவல்கள் பரவின.

அதாவது நேற்று மாலை 5 மணிக்கு மேல் 200 ரூபாய் எடுக்க சென்றவர்களுக்கு 500 ரூபாய் வெளி வந்ததை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்களது வங்கி கணக்கில் இருந்து 200 ரூபாய் மட்டுமே பிடிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த தகவலை பற்றி அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் இந்த ஏடிஎம் மையத்தின் வாசலில் குவிய தொடங்கினர். 

இதனையடுத்து வங்கி நிர்வாகிகளுக்கு இதனைப் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் அவர்களும் அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்றனர். சென்று பார்த்து ஆய்வு செய்து அவர்கள் 200 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் தாள்கள் வெளி வருவதை உறுதி செய்தனர். இதனையடுத்து ஏடிஎம் மையத்தை மூடிவிட்டனர். பின்னர் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு தகவல் அளித்து இந்த இயந்திர கோளாறை சரி செய்யுமாறு கூறியுள்ளனர்.

மேலும் அந்த அதிகாரிகள் பேசுகையில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையம் என்றாலும் அதில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனங்கள் செய்துவருகின்றனர் . ஆகையால் அப்படியாக பணம் நிரப்பும்போது 200 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் தாள்களை அவர்கள் தவறுதலாக வைத்திருக்கின்றனர்.

அதன் காரணமாகவே 200 ரூபாய் உள்ளீடு செய்த வாடிக்கையாளருக்கு 500 ரூபாய் தாள்கள் இயந்திரத்தில் இருந்து வெளிவந்துள்ளது. இதுவரை எத்தனை பேருக்கு இம்மாதிரியாக 500 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துள்ளன என்ற தகவல் தெரியவில்லை . மேலும் இந்த நஷ்டத்தை குறிப்பிட தனியார் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.