சென்னையில் மீண்டும் ஊரடங்கு - 19ஆம் தேதி முதல் 12 நாள்கள்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த 12 நாள்களுக்கு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் முழு ஊரடங்கு செயல்படுத்துவதென அரசு முடிவெடுத்துள்ளது.


முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசுச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. முன்னதாக, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் நடத்திய ஆலோசனையின் பேரிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பெருநகர சென்னையிலும் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் சென்னைப் பெருநகராட்சிப் பகுதிகளிலும் 19ஆம் தேதி தொடங்கும் நேரம் முதல் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை இந்த ஊரடங்கு இருக்கும். அரசின் இந்த அறிவிப்பில் முன்னதாக பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சரக்குப் போக்குவரத்துக்கு தடை இல்லை; மருத்துவம் சார்ந்த போக்குவரத்துக்கு அனுமதி உண்டு. தனியார் வண்டிகளுக்கு அனுமதி இல்லை; அவையே அவசர மருத்துவத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும். மைய, மாநில அரசுத் துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளவர்கள் பணிக்குச் செல்லவேண்டியதில்லை. ஆனால், வெளி மாநிலத்திலிருந்து வரும் தொடர்வண்டிகள், விமானங்கள், வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்கள், விமானங்களுக்கு தொடர்ந்து அனுமதி இல்லை. இப்படியான 20 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.