யாசிர் ஷாவின் சூழலில் வீழ்ந்தது நியூசீலாந்து

துபாயில் நடைபெற்ற நியூசீலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஹரிஷ் சோஹைல் 147ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாபர் அசாம் (நாட் அவுட்) 127 ரன்களை எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய நியூசீலாந்து அணி பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் யாசிர் ஷாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோவான் ஆனது. பாகிஸ்தானின் யாசிர் ஷா 41 ரன்களை விட்டு கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் பாலோவான் ஆனதால் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த நியூசீலாந்து அணி 312 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் பாகிஸ்தான் அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் அதிகபட்சமாக நியூசீலாந்து அணியின் ராஸ் டெய்லர் 82 ரன்களும் , ஹென்றி நிக்கோலஸ் 77 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது இன்னிங்சிலும் பாகிஸ்தானின் யாசிர் ஷா அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை கைப்பற்றினார்.  இந்த போட்டியில் 14 விக்கெட்களை கைப்பற்றி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த யாசிர் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் தேதி அபுதாபியில் தொடங்கவுள்ளது.

இந்த போட்டியில் யாசிர் ஷா இரண்டு சாதனைகளை புரிந்துள்ளார். ஆட்டத்தின் மூன்றாம் நாளில் பத்து விக்கெட்களை (இரண்டு இன்னிங்சிலும்)கைப்பற்றி இந்திய அணியின் அணில் கும்ப்ளே சாதனையை சமன் செய்தார். னால் அணில் கும்ப்ளே ஒரே இன்னிங்சில் பாகிஸ்தானின் 10 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

யாசிர் ஷா இரண்டு இன்னிங்க்ஸையும் சேர்த்து 14 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய  இம்ரான் கான் சாதனையை சமன் செய்துள்ளார்.