பேராசிரியருக்கு வந்த கடைசி கடிதம்..! டெலிவரி செய்ய மாலையுடன் வந்து நெகிழ வைத்த போஸ்ட்மேன்!

பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு தினமும் கடிதங்களை எடுத்துவரும் தபால்காரர் இறுதி அஞ்சலி செலுத்த இயலாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராக பேராசிரியர் பெருந்தகை செயல்பட்டு வந்தார். அறிஞர் அண்ணாவின் தம்பியாகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் அண்ணனாகவும் பணியாற்றி கழகத்தின் கட்டிக்காத்த பெருமை அவரையே சாரும். வெள்ளி விழாவில் பேராசிரியர் என்று கலைஞர் வாஞ்சையோடு அழைத்தபோதிலும், தனிப்பட்ட முறையில் அண்ணன் என்றே அவரை அழைத்து வந்தார்.

சென்ற மாதம் 24-ஆம் தேதியன்று வயது மூப்பின் காரணமாக பேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ தீவிர சிகிச்சையில் ஈடுபட்டிருந்தாலும், அவருடைய உடல்நிலையானது சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேராசிரியரின் உடல்நலத்தை பற்றி கேட்டறிவதற்கு பலமுறை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பேராசிரியர் உயிரிழந்தார். அவருடைய உடலானது அண்ணாநகரிலுள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 20 வருடங்களாக பேராசிரியருக்கு வரும் கடிதங்களை தபால்காரர் சிதம்பரம் என்பவர் அவரிடம் எடுத்துவந்து கொடுப்பதாக இருந்துள்ளார். 

இன்று இனமான பேராசிரியர் மறைந்ததை தொடர்ந்து சிதம்பரம் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மாலையையும், கடிதத்தையும் எடுத்து வந்துள்ளார். ஆனால் கூட்ட நெரிசலின் காரணமாக அவரால் எளிதில் பார்க்க இயலவில்லை. மேலும் அடுத்தவர்களுக்கு கொடுக்கப்படும் தபால்கள் தாமதித்துவிடும் என்பதற்காக பின்புறத்தில் போவதற்கு முயற்சி செய்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் சிதம்பரத்தை அவ்வழியில் வந்து பேராசிரியருக்கு மரியாதை செலுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் போராடி பார்த்தும் இயலாததை தொடர்ந்து, தான் எடுத்து வந்த மாலையையும் கடிதத்தையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.