தமிழகத்தில் திடீர் மழை..! கொரோனா அதிகரிக்குமா? குறையுமா? பரபர ரிப்போர்ட்!

மழை பெய்து வருவதால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறையுமா அல்லது அதிகரிக்குமா என்ற குழப்பம் தற்போது மக்களிடையே நிலவி வருகிறது.


கடந்த இரண்டு நாட்களாக சென்னை ,கோயம்புத்தூர் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர், வேலூர், நீலகிரி உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை திருச்சியில் ஆலங்கட்டி மழை பெய்தது. தென் கடலோர மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை கோடைக்காலத்தில் ஏற்படும் சாதாரண வெப்ப சலனம் மழை என்றாலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

கொரோனா நோய் தாக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ அவரிடமிருந்து வெளிப்படும் நீர் திவலைகளிலிருந்து தான் கொரோனா வைரஸ் தொற்று மற்றவருக்கு பரவுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த நீர் திவலைகள் மழை நீரில் கலந்து அடித்து செல்லப்படும் என்று சில தரப்பினர் கூறி வருகின்றனர். இதனால் மழை பெய்தால் கொரோனா பரவல் குறையும் என்ற கருத்து பரவி வருகிறது.

இதுகுறித்து தொற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளதை பற்றி நாம் காண்போம்.மழை பெய்தால் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் குறையும் என்ற கருத்து பரவி வருகிறது. ஆனால் கொரோனா நோய்த்தொற்றை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசி வருகிறார்கள். இதே போல தான் வெயில் அதிகமாக உள்ள இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாது என்று பலரும் கூறிவந்தனர். ஆனால் சார்ஸ், மெர்ஸ், பறவை காய்ச்சல் போன்ற பலவிதமான நோய்களும் வெயில் காலத்தில் தான் நம் இந்தியாவில் வேகமாக பரவின. 

கொரோனா நோய்தொற்று அழிய வேண்டுமென்றால் 70 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும். கொரோனா அழியும் அளவுக்கு வெப்பநிலை எடுத்துக்கொண்டால் மனிதர்கள் இறக்க நேரிடும். ஆகையால் மழைக்கும் வெயிலுக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை.

டெங்கு நோய் என்றால் மழைக்காலத்தில் கொசு அதிகமாக உற்பத்தி ஆகும். இதனால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால் கொரோனா நோய் தொற்று எங்கு வேண்டுமானாலும் இருக்கும். வெயில் அதிகம் படும் இடத்தில் சீக்கிரமாக அழிந்துவிடும். வெயில் இல்லாமல் ஈரப்பதம் அதிகமாக உள்ள இடத்தில் கொரோனா நோய்தொற்று நீண்ட நேரம் இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று என்பது ஓா் உயிரி இல்லாத ரசாயனத் துகள். ஆா்.என்.ஏ. என்கிற புரதத்தின் மேல் ஒரு கொழுப்பிலான அடுக்கு இருக்கிறது. அதை மைக்ராஸ்கோப்பிலேயே கண்டுபிடிப்பது சிரமம்.இப்படிப்பட்ட நுண்துகள் கிருமி இருமும்போது கைக்குட்டையால் மூடிக் கொண்டால்கூட, அந்தக் கைக்குட்டையைப் பாக்கெட்டில் வைக்கும்போதோ, இருமியவரின் கைகளில்பட்டோ அதன் மூலம் பரவும். அந்தக் கிருமிகள் கண், மூக்கு, வாய் அருகே போகும் அதன் வீரியம் அதிகரித்துவிடும். 

ஆகையால் ஒருவரின் தும்பல் மற்றும் இருமலில் இருந்து வரும் நீா் திவலையை மழை நீர் அடித்துச் சென்றுவிட்டால் கொரோனா பரவாது என்பதெல்லாம் வதந்தி. நீா் திவலை என்றால் கட்டிகட்டியாகப் படிந்து கிடக்காது. பனித்துளிகளைவிட மிக மிக நுண்ணிய திவலை. ஆனால், அந்தத் நீர் திவலை மிகவும் ஆபத்தானது. இது சாலையில் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது.வீட்டில் உள்ள பொருட்களில் இந்தத் திவலைகள் இருக்கலாம். ஆகையால் வீட்டிலுள்ள திவலகளை மழை அடித்து செல்ல இயலாது . ஆகையால் தான் கைகளைக் கிருமி நாசினி கொண்டு துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஒருசில வெளிநாடுகளில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தாலும் அவர்கள் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருப்பார்கள். ஆகையால் கொரோனா பரிசோதனை செய்வதை நாம் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நாம் கண்டறியலாம். மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதித்து அவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளலாம். அவ்வாறு நோய் பரவியிருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் .இவற்றை முறையாக செய்வதன் மூலமாக மட்டுமே கொரோனாவை அழிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.