நாட்டின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையில் பரவிய கொரோனா..! நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்ட வெங்காயம்? அடுத்து என்ன?

நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையில் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் சம்பவமானது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 73,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 13,40,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 4281 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 311 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. 621 பேர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் 790 நோயாளிகளை கொண்டு முதலிடத்தில் உள்ளது. 

நம் நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய சந்தை என்று கருதப்படுவது நாசிக் பகுதியிலுள்ள வெங்காய சந்தை. அந்த சந்தையில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு ரொட்டி கொடுப்பதற்காக சென்று வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ள செய்தியானது தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த செய்தியினால் மத்திய அரசாங்கம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இங்கிருந்து நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களுக்கு வெங்காயம் வைக்கப்படுவதால் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. நேற்று உடனடியாக மத்திய அரசாங்கம், இந்த வெங்காய சந்தைக்கு தடை விதித்துள்ளது. யாருக்கும் உள்ளே செல்ல அனுமதியில்லை என்றும், உள்ளேயிருந்து வெளியே வருவதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே மீண்டும் சந்தைகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.