சென்னையில் அதிகரிக்கும் கொரோனா கிளஸ்டர்..! பீதி கிளப்பும் ராயபுரம்..! எச்சரிக்கும் ரெட் ஜோன்..!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதித்த பகுதியாக ராயபுரம் மாறிவருகிறது.


கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகம் எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1150 ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தான் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னையில் இதுவரை 205 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ராயபுரத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது என தெரியவந்துள்ளது.

இதுவரை ராயபுரத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை பல மாவட்டங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ராயபுரத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மூலம் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது. அதன்பின்பு அந்த வைரஸ் தொற்று அவரை தொடர்பு கொண்ட மற்றவர்களுக்கு பரவ ஆரம்பித்தது. இதை கிளஸ்டர் பரவல் என்று கூறுகிறார்கள். கொஞ்சம் ஆபத்தானது என்று கருதப்படும் இந்த கிளஸ்டர் பரவல் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தான் இருக்கிறது எனவும் சென்னையில் ராயபுரம் பகுதியில் கிளஸ்டர் பரவல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கிளஸ்டர் பரவல் என்பது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக்கு இடைப்பட்ட பரவலாகும். வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நபரின் மூலம் கொரோனா நோய் தொற்று அவரது உறவினர்களுக்கு பரவி அவர்கள் மூலமாக வேறு சில உறவினர்களுக்கு பரவினால் அது கிளஸ்டர் பரவல் ஆகும். இதனால்தான் அந்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் சென்னையில் அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் தலா 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிக நகர் 26 பேரும், தண்டையார்பேட்டையில் 18 பேரும், தேனாம்பேட்டையில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.