பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா ஆபத்து வந்தாச்சு..! பேட்டி கொடுப்பதுதான் அரசுக்கு முக்கியமா..?

செய்தியாளர்களுக்கும் கொரோனா தொற்று வந்திருக்கும் சூழலில், பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பதை தவிர்க்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


உலகம் முழுவது அச்சுறுத்தும் கொரோனா தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. காவல்துறையினர்,மருத்துவத்துறையினர்,தூய்மைப் பணிபுரிவோர் போன்று இரவும் பகலுமாக பத்திரிகையாளர்கள் ஆபத்தான சூழலில் பணியாற்றி வருகிறார்கள். 

கொரோனா நோய்த்தொற்றை தடுக்க – முறியடிக்க உலகின் பல நாடுகள் போராடி வருகின்றன. சமுகவிலகலே இந்த கொரோனா நோய்த்தொற்றை பரவாமல் தடுக்கும் என்ற நிலையில் செய்தியாளர்களுக்கு எந்தவிதமான உரிய பாதுகாப்பு கவசங்கள் இல்லாத நிலையில் மருத்துவமனை வளாகங்களிலும் மற்ற இடங்களிலும் நெருக்கமான சூழலில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவது நோய்த்தொற்றை பரப்பும் வாய்ப்புகளை அதிகரிக்கவே செய்யும். 

மக்களுக்கு சென்றடைய வேண்டிய முக்கியமான செய்திகளை தெரிவிக்க காணொளிகள்,டிஜிட்டல் செய்தியாளர் சந்திப்பு ,தினசரி ஊடக அறிக்கைகள் ஆகிய வழிமுறைகள் கடைப்பிடிக்க தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. மேலும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் முகம் தெரியாமல் தியாக உணர்வுடன் பலர் பாடுபட்டுக் கொண்டிருக்க இன்றைய தேவை விழிப்புணர்வு மட்டுமே.

கொரோனா காலக்கட்டத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு தொலைபேசி வாயிலாகவே பதில் தரக்கூடிய அளவில் சுகாதாரம்,உள்ளாட்சி ஆகிய துறைகளில் மூத்த அதிகாரிகளை அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களாக நியமித்து அவர்களது விவரங்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பது என்பது தேவைப்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண உதவும்.

இதை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.