கொரோனா தாக்கிய கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்! பிறந்த குழந்தையை பிரித்து வீடியோ காலில் டாக்டர்கள் காட்டிய பரிதாபம்! எங்கு தெரியுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்மணி தனது பிறந்த குழந்தையை வீடியோ கால் மூலம் பார்த்த சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது.


சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மக்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண்மணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்மணி மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனால் கடந்த 18ம் தேதி அவருக்கு குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பிறந்த குழந்தை தனி வார்டுக்கு இட மாற்றம் செய்யப்பட்டது. தனக்கு குழந்தை பிறந்ததை அறிந்த அந்தப் பெண்மணி தனது குழந்தையை பார்க்க வேண்டுமென்று அங்கு இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

இதனால் பிறந்த குழந்தையை அவரது தாய் பார்க்கும்படி ஒரு வித்தியாசமான ஏற்பாட்டை அந்த மருத்துவமனை செய்தது. அதன்படி பிறந்த குழந்தையை அவரது தாயார் வீடியோகால் மூலம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.