வீட்டிலேயே இருந்து வெறுப்பா இருக்கா? சுவையான ஆரோக்கியமான கோதுமை வாழைப்பழ கேக் செய்து பாருங்க!

கோதுமை மாவுடன் வெல்லம் தேங்காய் வாழைப்பழம் சேர்த்து எண்ணெயில் பொரித்து அப்பமாகத்தான் சாப்பிட்டு இருப்பீர்கள்


ஆனால் இப்படி ஆவியில் வேக வைத்து சாப்பிட்டு பாருங்கள் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

வெல்லம் – 1 கப்

தண்ணீர் – 1 கப்

கனிந்த வாழைப்பழம் – 3

தேங்காய் துருவல் – 1 கப்

நெய் – 2 ஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

கோதுமை மாவு – 1 கப்

நட்ஸ் - தேவைக்கேற்ப

செய்முறை:

கடாயில் ஒரு கப் பாகு வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டி எடுத்து வைக்கவும்.

நன்றாக கனிந்த 3 வாழைப்பழங்களை பொடியாக நறுக்கி அதை ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக வதக்கவும். பின்னர் அதனுடன் ஒரு கப் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவும். பின்னர் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்க்கவும். இதை அப்படியே வெல்ல கரைசலில் சேர்த்து கரண்டியால் நன்றாக கலந்து மசித்து விடவும்.

மசித்த வாழைப்பழம் கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து வறுத்த முந்திரி பாதாம் என விருப்பமான நட்ஸை பொடியாக சீவி சேர்த்து கட்டி தட்டாது கலந்து விடவும்,

இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும், இட்லி பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு ஸ்டாண்டை வைக்கவும். பின்னர் அதன்மீது கலவையை வைத்து இட்லி பாத்திரத்தை மூடவும், அடுப்பை மிதமான தீயில் 10 நிமிடம் வைத்திருந்து அணைத்து வெளியே எடுக்கவும், நன்றாக ஆறியதும் அதை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து உங்களுக்கு விருப்பமான அளவிலும் ஷேப்பிலும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

சுவையான சத்துள்ள கோதுமை கேக் ரெடி