ஏழு பேர் விடுதலையில் தி.மு.க.வுடன் மோதும் காங்கிரஸ். கூட்டணிக்குச் சிக்கல்

தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது கவர்னர் நடவடிக்கை எடுத்து, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன.


எடப்பாடியார் கொடுக்கும் அழுத்தம் காரணமாக அடுத்த சில நாட்களில் இவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தயாராகிறது.  

ஆனால், இதற்கு தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ‘’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல. பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.

கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது”என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வின் கோரிக்கையைத்தான் தி.மு.க.வும் வலியுறுத்துகிறது. ஏழு பேர் விடுதலையையும் தி.மு.க. வலியுறுத்தும் நேரத்தில், காங்கிரஸ் எதிர்ப்பு காட்டுவது கூட்டணியில் கடும் குழப்பத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.