தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் சொத்துகளைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் 11 பேரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சொத்துகளை மீட்க ஒரு குழு நியமனம்!

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கென அசையா சொத்துகள், வங்கிசேமிப்பு என ஏராளமான சொத்து உள்ளது. இதை அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சியின் அறக்கட்டளை போன்ற அமைப்புகள் கட்டுப்படுத்துகின்றன. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கென உள்ள சொத்துகளை கட்சியின் முன்னாள் நிர்வாகிகள், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள், அயலவர் என பல தரப்பினரும் உரிய வாடகை, பணம் செலுத்தாமல் அனுபவித்துவருகின்றனர்.
சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள மாநிலத் தலைமையகமான சத்தியமூர்த்திபவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் மற்றும் அதன் முன்பாக அண்ணாசாலையில் அமைந்துள்ள நீண்ட வணிக வளாகம், காமராசர் அரங்கம் உள்பட பல கட்டடங்களும் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் ஆகும். இவற்றின் மூலம் வரவேண்டிய வருவாயை முறைப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கட்சிக்குள் கோரிக்கை இருந்துவருகிறது.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
அக்குழுவின் உறுப்பினர்களாக,
1. ஜே.எம். ஆரூண்
2. நாசே ஜெ. ராமச்சந்திரன்
3. ஆ. கோபண்ணா
4. டி.என். முருகானந்தம்
5. பொன். கிருஷ்ணமூர்த்தி
6. டி. செல்வம்
7. எஸ்.எஸ். ராமசுப்பு
8. கே. தணிகாசலம்
9. வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம்
10. வழக்கறிஞர் எஸ்.கே. நவாஸ்
11. எம்.பி. ரஞ்சன்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவின் முதல் கூட்டம் மார்ச் மாதம் 6 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் என்றும் அழகிரி இன்றைய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.