கூட்டுறவு வங்கி விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் டெபாசிட் பணத்தை எடுத்து கபளீகரம் செய்வதற்காகவே, வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்கு கொண்டுசெல்கிறது மத்திய அரசு என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.


கூட்டுறவு மாநில அரசின் கீழ் உள்ள துறையாகும். மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமலேயே மாநில அரசின் உரிமைகளையும் அதிகாரத்தையும் பறித்துள்ளது மத்திய அரசு. இது கூட்டாட்சி முறைக்கு நேர் எதிரானதாகும்.

நாடு முழுவதும் உள்ள 1482 நகர கூட்டுறவு வங்கிகளையும், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறோம் எனவும், இதனால் கூட்டுறவு வங்கியில் நடைபெறும் முறைகேடுகளை களையவும், வைப்பீட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நகர கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று தான் செயல்படுகிறது. மேலும் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையும், ஆய்வும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஏதோ இப்போதுதான் நகர கூட்டுறவு வங்கிகளின் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளோம் என்பதெல்லாம் வெளி உலகிற்கு மட்டுமே.

நகர வங்கிகளில் 8.6 கோடி வைப்பீட்டாளர்களின் வைப்புத் தொகை ரூபாய் 4.85 இலட்சம் கோடி இருப்பில் உள்ளது தான் மத்திய அரசின் கண்ணை உறுத்துகிறது. எனவேதான் கூட்டுறவு வங்கிகளை அவசரம் சட்டம் போட்டு கையகப்படுத்துகிறது மத்திய அரசு. கூட்டுறவு வங்கிகளின் மீதான நம்பகத்தன்மை இதனால் உறுதிப்படுத்தப்படும் என்கிறது மத்திய அரசு. அவ்வாறெனில் பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், தனியார் வங்கிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், ஊழல்கள், பெரும் தொகையாக உள்ள வராக்கடன் இவைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு.

எஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் மூன்று ஆண்டுகளாக இருந்தது. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் தான் இருந்தது. ஹர்ஷத் மேத்தா ஊழல் முதல் தற்போது பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வரை தீர்வு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கி தன்னாட்சி பெற்ற நிறுவனமாக இல்லை என்பதையும், மத்திய அரசின் கைப்பாவையாக தான் செயல்படுகிறது என்பதையும் அனைவரும் அறிவர்.

இனி, வட்டி சீரமைப்பு என்ற பெயரில் வைப்பீட்டாளர்களின் வட்டிவிகிதம் குறைக்கப்படும். வைப்பீட்டாளர்கள் தங்களது வைப்பீட்டுத் தொகை குறித்து வருமானவரி கணக்கு சமர்ப்பிக்க வேண்டி இருக்கும் மற்றும் வருமானவரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

 ரிசர்வ் வங்கி கண்காணிப்பு என்ற பெயரில் மேலாண்மை நிர்வாகிகளை பணியமர்த்த கூடும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் அதிகாரம் பறிக்கப்படும். நிர்வாக காரணங்களை முன்னிறுத்தி வங்கிகளின் இணைப்பு, வங்கிகள் கலைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.