முதுகில் குத்தி வயிறு வழியாக வந்த இரும்பு ராடு கம்பி..! தஞ்சை என்ஜினியருக்கு நேர்ந்த விபரீதம்! என்னாச்சு தெரியுமா?

தஞ்சையில் கட்டிடம் வேலை பார்த்து வந்த இன்ஜினியர் ஒருவருக்கு இரும்பு ராடு கம்பி ஒன்று முதுகில் குத்தி வயிறு வழியாக வெளியே வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு பகுதிக்கு அருகில் பினையூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக சில வகுப்பறைகள் கட்டித் தருவதற்கு உத்தரவிடப்பட்டு அந்த வகுப்பறைகள் கட்டும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களில் தூண்கள் அனைத்தும் அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டி கம்பிகள் நடப்பட்டிருந்தன. இந்த கட்டிட வேலை அனைத்தையும் அதே பின்னையூர் கிராமத்தை சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரி ஐயப்பன் (வயது 26) மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில் ஐயப்பன் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கம்பி நடப்பட்டு கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டிருந்த பள்ளத்திற்கு அருகே நின்று செல்போனில் தன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக தவறுதலாக அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விட்டார். பள்ளத்தில் விழுந்து சமயத்தில் கான்கிரீட் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய இரும்பு ராடு கம்பி முதுகு வழியாக பாய்ந்து வயிறு வழியாக வெளியே வந்தது. இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் கட்டர் மெஷினின் உதவியோடு இன்ஜினியர் ஐயப்பன் வயிற்று வெளியே இருந்த கம்பியை வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஐயப்பனை உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் முத்துவிநாயகம் தலைமையிலான மருத்துவக் குழு ஐயப்பனின் உடலில் சிக்கிக்கொண்ட கம்பினை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஐயப்பனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தங்களுடைய கண்காணிப்பில் வைத்து சிகிச்சை வழங்கி வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.