சிக்ஸ் மெஷின் என்று வர்ணிக்கப்படும் கிறிஸ் கெயில், ‘ஐ டோன்ட் லைக் க்ரிக்கெட்... ஐ லவ் இட்‘ என்ற தலைப்பில் ஒரு சுயசரிதை எழுதியுள்ளார். அதில் ஒரு பகுதி இன்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியாகியுள்ளது. விஜய் மல்லையாவின் பங்களாவில் அவர் அடித்த கொட்டத்தை மட்டும் படித்துப் பாருங்கள்.
விஜய் மல்லையா வீட்டில் கிறிஸ் கெயில் அனுபவம்..! அடேங்கப்பா ரசனைக்காரனைய்யா...
டீம் மேனேஜர் ஜார்ஜ் அவினாஷ் வந்தாரு. ’ஏம்பா, பொழுது போகாம போரடிக்குதா. கோவா கேள்வி பட்ருக்கீங்களாடா. அங்க நம்ம பாஸ் சொந்தமா ஒரு இடம் வச்சிருக்கார். கிங்ஃபிஷர் வில்லானு பேராம். அங்க வேணா போய் தங்கிட்டு வாங்களேன்பான்னு எங்கிட்ட சொன்னாரு. என்னா சொல்ற க்ரிஸ்’. ஒவ்வொருத்தரயா கேட்டேன். ’என்ன, போலாமா’.
எல்லாரும் தலையாட்னாங்க. ஆனா இப்ப வேணாமே, காலைல சொல்லட்டுமானு கேட்டாங்க. போத. சரினு விட்டுட்டேன். காலைல எல்லாரையும் எழுப்பினேன். ’டைமாச்சு, கிளம்புவமா’. லெப்ட் ரைட்டா தலய அசச்சானுங்க. வரலயாம். என்னாச்சு. ஹேங்கோவரா இருக்கலாம்.
ஜார்ஜ் போன் அடிச்சார். ‘என்னா பிக் மேன். பாஸ் மறுபடி விசாரிச்சார்பா. செம ஸ்பாட்டாம். போய்தான் பாருங்களேன்றார். அவருக்கு என்ன சொல்ல’. பாஸ் மகா ரசிகன். சொன்னா எதனா இருக்கும். நாமளாவது போய் பாத்தா என்னா.
கிளம்பிட்டேன். தனியா. ஃப்ளைட் அனுப்பிச்சாரு. ஏறி உக்காந்தேன். போய் எறங்கினேன். ஸ்வீட்டா ஒரு கார் வழுக்கிட்டு வந்து பிக்கப் பண்ணுச்சு. கேண்டலிம் போனோம். ஏதோ ஒரு ஆர்ச்சுக்குள்ள திரும்பி போய் நின்னுது. இறங்கினேன். அடடா. அடடா. என்னா சொல்றது.
நா பாத்த எத்தனையோ ஸ்டார் ஓட்டல விட கிங்ஃபிஷர் வில்லா பெருஸ்சா இருந்துது. அவ்ளோ பெரிய மாளிகை பாத்ததே இல்ல. உள்ள காலடி வச்சதும் அப்டியே நின்னுட்டேன். வெறிச்சு பாத்தா நல்லா இருக்காதுனு மனசு சொல்லுது. ஆனா முடியல. பிரமிச்சு போய் பாத்தேன்.
டேய், இது ஜேம்ஸ்பாண்ட் படத்துல வருமே, அந்த மாளிகை. அரண்மனை மாதிரி. ப்ளேபாய் மேன்ஷன். கான்கிரீட்டும் கண்ணாடியும் இழைச்சு கட்டின சொர்க்க லோகம். மனசுக்குள்ள பட்சி சொல்லுச்சு: க்ரிஸ், சரியான எடத்துக்குதாண்டா வந்திருக்க. என்ஜாய்.
பிரமாண்டமான அந்த மாட மாளிகை மொத்தமும் எனக்காகவாம். அய்ய்யோ.
வாங்க, ஒரு டூர் போலாம்னு வில்லாவை சுத்தி காட்ட ஒருத்தர் வந்தார். எந்த பக்கம் போனாலும் என் கூட ரெண்டு பட்லர் வந்தாங்க. ராஜாவுக்கு ரெண்டு பக்கமும் சேவகர்கள் வருவாங்கள, கதைல. அது மாதிரி. எனக்கே எனக்கா.
முதல் நீச்சல் குளத்துல குதிச்சேன். நீந்தினேன். விளையாடினேன். மிதந்தேன். உல்லாசம் அதுதான். அடுத்து கொஞ்ச நேரத்துல இரண்டாவது நீச்சல் குளத்துல பாஞ்சேன். ஒரு அங்கிய போத்திகிட்டு புல்வெளியில நடந்தேன். கைல ஒரு கிங்ஃபிஷர் பீரோட திரும்ப குளத்துக்கு போனேன். தண்ணிய விட்டு வெளிய வர மனசே இல்ல.
அதனால என்ன, ஒரு பாட்டில் காலியான அடுத்த செகண்ட் இன்னொரு பாட்டில் சில்லுனு கைல குடுத்தாங்க. எவ்ளோ வேணா குடிடானு சேலஞ்ச் மாதிரி. ஆமா, கிங்ஃபிஷர் வில்லாவுல கிங்ஃபிஷர் தீந்து போகுமா, என்ன. கோல்ஃப் வண்டில ஏறி உக்காந்து ஒரு ரவுண்ட் போனேன். குக் வந்தார். என்ன சாப்ப்டுறீங்க.
என்ன கிடைக்கும் இங்க. மெனுவ காட்டுங்க. சிரித்தார். நீங்கதான் சார் மெனு. நீங்க என்ன கேட்டாலும் செஞ்சு தருவோம்.
வாரேவா. இது வேற உலகம்டா க்ரிஸ். மல்லயா சாதாரண பாஸ் இல்ல. நமக்கு மட்டும் இல்ல, இந்த உலகத்துக்கே பாஸ். வேர்ல்ட் பாஸ். யுனிவர்ஸ் பாஸ். எப்டி வேணா சொல்லலாம்.
நம்பர் 1சி, ஜேம்ஸ் ரோட், ரோலிங்டன் டவுன்ல தகர குடிசைல பொறந்து வளந்த பையனுக்கு இந்த மாதிரிலாம் உலகம் இருக்குறதே தெரியாது. அவனோட உலகம் ஒரு கிளாஸ் பால், ஒரு நியூட்ரிபன் அவ்வளவுதான். ஆனா, அந்த பாலும் நியூட்ரிபன்னும் கேட்டாகூட இவங்க அஞ்சு நிமிசத்துல கொண்டாந்து தருவாங்க. இந்த உலகத்துல கிடைகாதது எதுவுமே இருக்காது.
வில்லா உள்ளயே சினிமா தியேட்டர் இருக்கு. தனியா ஹாயா உக்காந்து ரசிக்கலாம். தனியாதான்னு இல்ல.
கராஜ் அவ்ளோ பெருசு. ஏகப்பட்ட கார்கள். பளபளனு மின்னுது. ஒரு பிரமாண்டமான மெர்சிடிஸ் பென்ஸ். என்ன மாடல்னே கண்டுபிடிக்க முடியல, அவ்ளோ பெருசு. ஆனா கார்கள் என் கவனத்த ஈர்க்கல. பெரிய்ய பைக் ஒண்ணு நின்னுது. முணு வீல். ஹார்லி டேவிட்சன். இது என்னானு கேட்டப்ப அந்த கதய சொன்னாங்க.
பாஸ் (விஜய் மல்லயா) அமெரிக்கால கார்ல போய்ட்டு இருந்தாரு. அப்ப ஒருத்தன் இந்த பைக்ல போய்ட்டு இருந்தான். அவன நிப்பாட்டி, பிரதர் நா எவ்ளோ காசு குடுத்தா இந்த பைக்க எனக்கு தருவ அப்டீனு பாஸ் கேட்ருக்கார். அந்தாளு அசத்தலா ஒரு பெரிய அமவுன்ட சொல்லிருக்கான். எங்க வாங்க போறார்னு நினைச்சிருப்பான். பாஸ் பத்தி தெரியாதுல்ல. ஸ்பாட்லயே டாலர்களை எண்ணி கைல குடுத்து பைக்க தூக்கிட்டு வந்துட்டாரு. அமெரிக்கால பொறந்த வண்டி கோவால குடியேறுச்சு.
ஏறி உக்காந்தேன் பைக் மேல. டெர்மினேட்டர்ல அர்னால்டு உக்காந்த மாதிரி ஸ்டைலா இருந்துருக்கும். அதுக்கு முன்னாடி சாதா பைக்கே நா ஓட்டினது இல்ல. 3 வீல் பைக் பாத்ததே இல்ல. ஆனா பட்லர் அழகா சொல்லி குடுத்தாரு. ஸ்டார்ட் பண்ணி எடுத்தேன்.
ப்ர்ர்ர்ர்ர்ரூம்!
ஆத்தி. என்னா ஸ்பீடு. சட்டைல பட்டன் போடல. தலைல ஹெல்மட் இல்ல. சன் கிளாஸ் மூக்குக்கு கீழே எறங்கிருக்கு. இந்த மாதிரி வண்டிய இப்டி ஓட்ட யாராவது விடுவானா. என்னய விட்டாங்க. ஏன்னா அன்னிக்கு நாந்தான் கிங்கு. கிங்ஃபிஷர் வில்லாவுக்கே கிங்கு.
சர், மெயின் ரோட்ல ஓட்றீங்களானு பட்லர் கேட்டார்.
நோ வே. உங்க பாஸ் மாளிகைக்குள்ள ரேஸ் டிராக்காட்டம் செமயா ரோடு போட்டு வச்சிருக்கும்போது வெளில எதுக்கு போகனும்னு சொல்லிட்டு ரெண்டு ரவுண்ட் ஓட்டினேன். செம்ம கிக்கு.
ஒரு ரம்மும் கோக்கும் குடுங்களேன். சொல்லி முடிக்கிறதுக்குள்ள நீட்டினாங்க. உறிஞ்சிகிட்டே தியேட்டருக்கு போனேன்.
என்ன படம் பாக்கலாம்?
அது உங்க இஷ்டம். எந்த படம் வேணாலும் பாக்க முடியும். பட்லர்கள் டயர்டாகவே இல்ல. ஒரு ரவுண்ட் முடிந்தால் அடுத்த நிமிடம் கிளாஸ் ஃபுல். எனக்கே தெரியாது, எப்போ நிரப்பினாங்கனு. காலைல கண் முழிக்கும்போது எதாவது வேணுமானு பக்கத்துல வருவார் பட்லர்.
எனக்கே சொல்ல தெரியலயே, எனக்கு என்ன வேணும்னு.
வேணா யானை மேல ஒரு சவாரி போய்ட்டு வரீங்களா.
குபுக். என்னாது, உங்க பாஸ் யானையும் வச்சிருக்காரா?
நம்ம பாஸ். சொந்தமா வச்சுக்கல. அவரோட ஃபிரண்ட் இங்க வச்சிருக்கார்.
அப்றமென்னா, ஆன மேலயும் உக்காந்து ஒரு ரவுண்டு போனேன். ஹார்லி அளவுக்கு ஸ்பீடு கெடயாது. ஆனா அதுல போறப்ப இருந்த மாதிரியே அங்கயும் இங்கயுமா ஒரு ஆட்டம்.
நாலு நாளாகியும் போறதுக்கு மனசே வரல. என்ன உலகம், என்ன வாழ்க்கை.
மறுநாள் மேச் இருக்கே.
திரும்பி வந்ததும் டீம் மேட்ஸ்கிட்ட சொன்னேன் எல்லாத்தயும். கண்ண சிமிட்டாம கேட்டாங்க. ரியாக்ஷன் ஒரே மாதிரி இருந்துச்சு:
வட போச்சே!