சித்தரஞ்சன் வீடு விவகாரம்... ஸ்டாலின், உதயநிதி பதில் சொல்வார்களா..? கேள்வி எழுப்பும் அறப்போர் இயக்கம்.

தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில், சென்னை, ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள பெரிய பங்களாவில், ஸ்டாலின், உதயநிதி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த வீடு குறித்து, ஸ்டாலின் தன் வேட்பு மனுவில் எதுவும் குறிப்பிடவில்லை என்பதுதான் இப்போது விவகாரமாக மாறிவருகிறது.


இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசன் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம். ‘‘ஸ்டாலின், 2016ல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தன் குடும்பத்தினர் சொத்து மதிப்பு, 5.8 கோடி ரூபாய் என, குறிப்பிட்டார்.சித்தரஞ்சன் சாலை பங்களாவின் மதிப்பு மட்டும், 20 கோடிக்கு மேல் இருக்கும். அந்த வீடு பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடப்படவே இல்லையே ஏன் என, அப்போதே விசாரித்தோம்.

அந்த வீடு, 'ஸ்நோ ஹவுசிங் பிரைவேட் லிமிட்டெட்' என்ற, நிறுவனத்தின் பெயரில் உள்ளது. கடந்த, 2007ல், 11.62 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் அதை வாங்கியது. நிறுவனத்தின் இயக்குனர்கள், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின். நிறுவனத்துக்கு ஏது அந்த பணம் என்று பார்த்தால், உதயநிதி அந்த நிறுவனத்துக்கு, 10.3 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அது, ஆவணங்கள் வாயிலாக தெரிய வந்தது

.நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் என, ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள துர்கா, அந்த வீட்டில், வாடகை இல்லாமல் குடியிருக்க நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆவணங்களை பார்த்ததும், ஸ்டாலின், உதயநிதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டோம். அதாவது, 2008க்கு பின் தான், உதயநிதி, 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' என்ற, சினிமா கம்பெனியை துவங்கினார். படங்கள் தயாரித்தார்; வினியோகித்தார்; நடித்தார். அதற்கு முன், அதாவது, 2007 வரை, அவர் தொழில் எதுவும் செய்யவில்லை. வேறு வழியில் சம்பாதித்து இருந்தால், வரித்துறையில் அதற்கான கணக்கு காட்டி இருப்பார்.

அவ்வாறு காட்டவில்லை என்பதால், வீடு வாங்க மேற்படி கம்பெனிக்கு கொடுக்க,10.30 கோடி ரூபாய் அவருக்கு எப்படி வந்தது என, கேட்டோம்; பதிலே வரவில்லை.சரி, 'ஸ்நோ ஹவுசிங் பிரைவேட் லிமிட்டெட்' என்ற, அந்த நிறுவனம் வீடு கட்டுவது, வாங்குவது, விற்பது குறித்து விசாரித்தோம். அப்படி எதையும், அந்த நிறுவனம் செய்யவே இல்லை. துர்கா ஸ்டாலின் குடும்பத்துடன் வசிக்க, ஒரு பங்களா வாங்கியது மட்டுமே, அந்த நிறுவனம் செய்த ஒரே, 'பிசினஸ்.' நீலாங்கரையில், இரு இடங்களை அது வாங்கியது. அதில் கட்டுமானம் நடக்கவில்லை; விற்பனையும் நடக்கவில்லை.

'வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை; என் பெயரில் அந்த வீடு இல்லை' என, சொல்லி, ஸ்டாலின் எளிதாக கடந்து போய்விடலாம். ஆனால், உதயநிதி அப்படி செய்ய முடியாது. வேட்பு மனுவிலேயே, சித்தரஞ்சன் சாலை பங்களா குறித்த விபரங்களை, அவர் சொல்லி இருக்கிறார். ஆகவே, அந்த, 10.30 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதை வெளிப்படையாக சொல்வதில் என்ன சிக்கல்?

நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தில் இருந்து தான், அந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்து, அதன் மூலம் வீடு வாங்கப்பட்டது என்றால், அதை வெளிப்படையாக சொல்வதில், உதயநிதிக்கு என்ன தயக்கம்? பொது வாழ்க்கைக்கு வந்து, தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்த பின்னும், உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பதில் என்ன பிரச்னை?

தகவல்களை மறைக்க மறைக்க, மக்களுக்கு சந்தேகம் அதிகமாகும். சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி மக்களுக்கு மட்டுமாவது, உதயநிதி உண்மையை சொல்வாரா? என்று கேட்கிறார்.

இதற்கு உதயநிதி பதில் என்னவோ..?