கொரனாவுக்குப் பின் சீனாவில் ஒன்றரை கோடி பேரை காணவில்லை! உண்மையில் பலி எண்ணிக்கை 4 ஆயிரம் தானா?

கொரனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கூட தொடவில்லை என சீனா தெரிவித்து வரும் நிலையில் அங்கு 1.5 கோடி பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்ற புள்ளிவிவரம் வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


ஹாங்காங்கை சேர்ந்த ஜெனிபர் ஜெங் என்பவர் நியூயார்க்கில் தற்போது வெளியிட்ட புள்ளிவிவரம்தான் தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் சொல்வதை கொஞ்சமேனும் நம்பலாம் என நாம் நினைக்கக் காரணம், 3 செல்போன் நிறுவனங்களின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி கூறியதால்தான். எதை வைத்து இதுபோன்ற அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறார் என்று பார்ப்போமா? கடந்த ஜனவரியில் சைனா மொபைல் நிறுவனம் சுமார் 81 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறதாம். தற்போது அவர்கள் எங்கே சென்றார்கள் என்ற கேள்வி எழுப்பி உள்ளது.  

அதேபோல் சைனா யூனிகார்ன் எனும் செல்போன் நிறுவனம் 10 லட்சம் வாடிக்கையாளர்களையும், சைனா டெலிகம்யூனிகேஷன் நிறுவனம் 5.6 மில்லியன் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதாவது 3 பிரபல செல்போன் நிறுவனங்களும் சேர்த்து, கடந்த 3 மாதங்களில் 1.46 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த புள்ளி விவரத்திற்கு இதுவரை பதில் தெரிவிக்காத சீன அரசு தற்போது வரை சுமார் 3,200 பேர் மட்டுமே கொரனாவால் உயிரிழந்ததாக தெரிவித்து வருகிறது.

கொரனா முதன் முதலில் தோன்றி பரவியது, சீனாவில் இருந்துதான். உலகம் முழுவதும் கொரனாவால் இவ்வளவு பேர் பாதிக்க சீனாவில் மட்டும் எப்படி இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் உயிரிழப்பு என்பது தற்போது எல்லோர் மனதிலும் எழும் கேள்வி.