கள்ளக் காதலன் மனைவிக்கு கள்ளக் காதலியால் ஏற்பட்ட கொடூரம்! பதற வைக்கும் காரணம்!

ஒரு நபரின் மனைவியைக் கொன்ற அவரது குழந்தைப் பருவக் காதலியையும், அதை தற்கொலையாக்கி நாடகமாடிய கணவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


டெல்லியின் கிஷன்கர் காவல் நிலையத்துக்கு ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் இருந்து ஒரு புகார் வந்தது. ராகுல் குமார் மிஸ்ரா என்ற நபர் தன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி எடுத்துக்கொண்டு வந்ததாகவும், ஆனால் அந்தப் பெண் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இது கொலையாக இருக்கக் கூடும் என்ற முடிவுக்குபோலீசார் வந்தனர். இதையடுத்து இறந்த பெண்ணான  பூஜா ராயின் கணவன் ராகுல் மிஸ்ரா, அவரது  தோழி பத்மா மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் ராகுலும் பத்மாவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததையடுத்து போலீசாரின் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகின.

ராகுலும், பத்மாவும் எல்.கே.ஜி. முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த நிலையில் கல்லூரிப் படிப்புக்காக வேறு வேறு ஊர்களுக்குச் சென்ற நிலையில் அதன் பிறகு சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் வாட்ஸ் ஆப் மூலம் பத்மா ராகுலை தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் பழகி வந்தனர். 

ஆனால் ராகுலின் குடும்பத்தினர் அவர்களது திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த 2017-ஆம் ஆண்டு பூஜாவை ராகுலுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து பழகி வந்த ராகுலும் பத்மாவும் பூஜாவை கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று ராகுல் வீட்டுக்குச் சென்ற பத்மா, பூஜாவுடன் சுமுகமாக பேசி அவர் சமைத்த உணவை உண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜா எதிர்பாராத நேரத்தில் அவரைக் கீழே தள்ளி தலையை தரையில் மீண்டும் மீண்டும் மோதி கொலை செய்ததும், பூஜாவின் உடல் அருகே தானே ஒரு தற்கொலைக் கடிதத்தை எழுதி வைத்ததும் தெரிய  வந்தது. இதையடுத்து பத்மாவையும் ராகுலையும் போலீசார் கைது செய்துள்ளனர்.